வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் புறச் சூழல் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் முகமான ஆரம்ப நிகழ்வு நேற்று (15) இறை ஆசியுடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக 3 கோடி 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
குறித்த கல்லூரியில் மழை காலங்களில் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதனால் மாணவர்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதனை நிவர்த்தி செய்யும் முகமாக இப் அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக கல்லூரியில் நிலவி வந்த இவ் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்த அமைச்சருக்கு பாடசலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை நிர்வாகம் என்பன தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்து கொண்டார்.கல்லூரியின் அதிபர் எ.ஜெயகுமணன்,பேத்தாழை சந்திர காந்தன் வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன்,வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியிலாளர்,மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிகளும் கலந்து கொண்டனர்.