ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்பதாக தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வை காணப்போவதாகப் பேசியிருந்தார். குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாகக் கூறியிருந்தார். 13ஆவது திருத்தச்சட்டத்தை ஓர் இறுதித் தீர்வாக தமிழ்க் கட்சிகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளா விட்டாலும்கூட, ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன. இதனடிப்படையில் ரணிலின் அழைப்பில் இடம் பெற்ற சர்வகட்சி மகாநாட்டிலும் பங்குகொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, தனியான சந்திப்புகளிலும் ஈடுபட்டிருந்தன. ஆனால், ரணில் விக்கிரமசிங்க கூறியதுபோல் விடயங்கள் இடம்பெறவில்லை. 13ஆவது திருத்தச்சட்டதை அமுல்படுத்தும் விடயத்திலும் முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில், தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு முயற்சிக்கு தமிழ்க் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை யென்று, ரணில் விக்கிரமசிங்க கூறுவது எந்த வகையில் சரியானது? இதற்கு மேல் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டுமென்று ரணில் எதிர்பார்க்கின்றார்?
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவ்வப்போது தேசிய இனப்பிரச்னை தொடர்பில் பேசிவருகின்றார் – ஆனால், அவரின் கூற்றை நிரூபிக்கும் வகையில் எந்தவகையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க தேர்தலை முன்வைத்து விடயங்களை இழுத்தடிக்க முற்படுகின்றாரா என்னும் கேள்வி எழுகின்றது.
நிலைமைகளை அவதானிக்கும் போது, எமது கேள்வி நியாயமானது – ஏனெனில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் தேவை – குறிப்பாக தென்னிலங்கையின் கடும்போக்கு சிங்கள – பௌத்த தரப்புகளின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்களின் ஆதரவையும் ஏதோவொரு வகையில் தக்கவைக்க வேண்டியிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வப்போது சில விடயங்களை கூறிவிட்டு, அது தொடர்பில் சலசலப்புக்களை ஏற்படுத்துவதைத் தாண்டி, செயலின் ஈடுபடும் துணிவை ரணில் காண்பிப்பாரா என்னும் சந்தேகம் வலுத்திருக்கின்றது. இந்த சந்தேகத்தை நியாயப்படுத்தும் வகையிலேயே அவரின் பேச்சுகளும் அமைந்திருக்கின்றன. இந்த பின் புலத்தில் நோக்கினால், ரணில் தொடர்ந்தும் பேசுபவராக இருக்கின்றாரேயன்றி செயலில் எதனையும் நிரூபிப்பவராக இல்லை.ஆரம்பத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசிய ரணில் விக்கிரமசிங்க – இப்போது புதிய அரசியல் யாப்பின் மூலமான தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் பேசுகின்றார். புதிய அரசியல் யாப்பொன்று இலங்கைத் தீவில் சாத்தியமானதா – அதிலும் தற்போது பொருளாதார நெருக்கடி – அதன் விளைவான அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றபோது, புதிய அரசியல் யாப்பு விடயம் சாத்தியமான ஒன்றா?
ஏற்கனவே, முன்னைய ஆட்சியில் புதிய அரசியல் யாப்புக்கு முயற்சித்து அதில் மோசமான தோல்வியை ரணில் சந்தித்திருக்கின்றார். அப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கியிருந்தது. ஆதரவுக்கு அப்பால் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமான முரண்பாட்டின்போது, கண்ணை மூடிக்கொண்டு தமிழ் கட்சிகள் ரணிலுக்கே
ஆதரவளித்திருந்தன. ரணிலுடன் இணைந்து செயல்பட்டதன் காரண மாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலிலும் பின்னடைவுகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால், ரணிலோ – தேசிய இனப்பிரச்சனைக் கான தீர்வு முயற்சிக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்று கூறுகின்றார். தமிழ் கட்சிகள் இதனை விடவும் எவ்வாறான ஆதரவை வழங்க முடியும்? ஒருவேளை தமிழ் கட்சிகள் அனைத்தையும் விட்டு விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து கொள்ள வேண்டுமென்றா ரணில் எதிர்பார்க்கின்றார்?