ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவரது சகா என சந்தேகிக்கப்படும் இருவரை நேற்று (20) அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷிலிருந்து அத்துமீறி அசாமுக்குள் நுழைந்த அவர்களை இந்திய சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இருவர் பங்களாதேஷில் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் வடகிழக்கு மாநிலமான அசாமின் சிறப்பு அதிரடிப்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் நடத்திய அதிரடி தேடுதல்வேட்டையில் பங்களாதேஷிலிருந்து அத்துமீறி புகுந்து அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள தர்மசாலாவில் பதுங்கியிருந்த ஹரிஸ் பரூக்கி, அவரது சகா ரேஹன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதில் பரூக்கி, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் என தெரியவந்துள்ளது.
இவர்கள் இந்தியாவில் தீவிரவாத இயக்கம் வளர உதவியதும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதும், பல்வேறு சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக இந்திய அதிரடிப்படை பொலிஸார் தெரிவித்தனர்.