இலங்கையில் கடனட்டைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை மீளச் செலுத்தப்படாத கடன் தொகை ஒரே மாதத்தில் 4,236 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் அண்மைய நிதிக் குறிகாட்டிகள் அறிக்கையின்படி, கடந்த ஜூலை மாத இறுதியில் 209,189 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட கடனட்டை நிலுவைத் தொகை, ஓகஸ்ட் மாத இறுதியில் 213,425 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதன்படி, ஒரே மாதத்தில் 423.6 கோடி ரூபா அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளுக்கு மத்தியில், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பொதுமக்கள் கடனட்டைகளை அதிகளவில் நாடுகின்றமை இதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, வங்கிகள் வழங்கும் விலைக்கழிவுகள், சிறப்புச் சலுகைகள் மற்றும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களும் கடனட்டை பயன்பாடு அதிகரிப்பதற்குப் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடனட்டைகள் ஊடாகப் பெறப்படும் கடன் தொகையை உரிய காலத்தில் மீளச் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள், குடும்பங்களின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார ரீதியான கவலைகளும் எழுந்துள்ளன.








