மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் வெசாக் தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு இறைச்சிக்டைகளுடன் மீன்கடைகளையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறித்து கடற்றொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு வழமையாக இறைச்சிக்கடைகள் மட்டுமே மூடுவதாகவும் ஆனால் தற்போது மீன்கடையினையும் மூடுமாறு பணித்துள்ளமையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் மூன்று தினங்களுக்குரிய மீன்களை சேமித்துவைத்திருந்த நிலையில் மாநகரசபையின் அறிவிப்பானது தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மாநகரசபையின் ஆணையாளர் என்.மதிவண்ணனிடம் வினவியபோது, ‘‘வழமையாக இறைச்சிக்கடைகளை வெசாக் தினத்தில் மூடுவதற்கான அறிவுறுத்தலை வழங்குவதாகவும் இம்முறை அரசாங்கம் புதிதாக மீன்கடைகளையும் மூடுமாறு பணித்துள்ளதாகவும் இது தொடர்பில் மாற்று ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிவருவதாகவும்‘‘ தெரிவித்துள்ளார்.