Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு அஞ்சலி நிகழ்வும் எதிரிகளை தேடும் அரசியலும் or “தமிழ் மக்கள் ஒரு மொக்கு சமூகமா?”

ஒரு அஞ்சலி நிகழ்வும் எதிரிகளை தேடும் அரசியலும் or “தமிழ் மக்கள் ஒரு மொக்கு சமூகமா?”

1 year ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

ஒரு பேரவலத்தின் போதுதான், ஒரு சமூகம் தன்னை உணர்ந்துகொள்ள முடியும். வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனற்ற சமூகங்கள், அந்த நெருக்கடிக்குள் தங்களை தொலைத்துவிடுகின்றன – மாறாக, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள சமூகங்களோ முன்னோக்கி பயணிக்கின்றன. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் பேரவலம் வெறுமனே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முடிவு மட்டுமல்ல – மாறாக, நம்மை ஆட்கொண்டிருந்த கற்பனாவாதங்கள், திமிர்த்தனங்கள், அதிமேதாவித் தனங்கள், அனைத்தினதும் முடிவாகும். ஆனாலும் இப்போதும் இதனை புரிந்துகொள்ளுமளவிற்கு, தமிழ் சமூகம் முன்னேறாமல் இருப்பதுதான் வேதனையானது. வெறும் உணர்சிகரமான தேசியக் கோசங்களாலும், பகட்டு வார்த்தைகளாலும் தமிழினத்தால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. அனைத்திலும் தோல்வி மட்டுமே மிஞ்சுகின்றது. மிச்சமென்ன சொல்லுங்கப்பா என்று, காலம்சென்ற கவிஞர் கி.பி.அரவிந்தனின் ஒரு கவி வரியுண்டு. ஆனால் இந்த நிலையிலும் களத்திலும் சரி, புலத்திலும் சரி, கோசங்கள் மட்டும் குறையவில்லை.

அண்மையில் இந்தக் கோச அரசியல் கூட்டம், மரணமான சாந்தனை, ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது. இதற்கு விளக்கமளிப்பதற்கு, கருத்துருவாக்கிகள் என்போரும் இருக்கின்றனர்.
யாரிந்த சாந்தன்? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் சம்பந்தப்பட்டு, இந்திய நீதித்துறையால் தண்டனை விதிக்கப்பட்டவர். தண்டையின் பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், உரியமுறையில் அவரது குடும்பத்தினருடன் இணைவதற்கான காரியங்கள் முறையாக நடைபெறவில்லை. தமிழ் நாட்டில் சாந்தனுக்கு பல ஈழ ஆதரவு அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அவ்வாறானவர்கள் சாந்தன் உயிரோடு இருக்கின்ற போது, உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அதே போன்று, புலம்பெயர் நாடுகளிருப்போர் உரிய காலத்தில் விரைந்து செயற்பட்டிருந்தால், சாந்தன் நலமாக நாடு திரும்பியிருக்காலம், ஆனால் அவ்வாறு எதனையும் செய்யாதவர்கள், பலரும் – தங்களின் அரசியல் நிகழ்சிநிரலுக்காக, சாந்தனின் மரணத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

ஒரு வேளை விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் – அதாவது, பிரபாகரன் இருந்திருந்தால், புலிகள், ஒரு போதும் சாந்தனின் இறுதி நிகழ்வை பொறுப்பெடுத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தாங்கள் செய்த தவறிலிருந்து வெளியேறுவதற்கான கதவுகளை திறக்கும் வழிகளையே அவர்கள் இறுதிவரையில் தேடிக் கொண்டிருந்தனர். இந்தியாவினால் மட்டுமே தங்களது குரல்வளையை இறுக்கியிருக்கும், கயிறை அறுத்தெறிய முடியுமென்பதில் புலிகளிடம் தெளிவிருந்தது. அதற்காக முயற்சித்தனர். அந்த அடிப்படையிலேயே அன்ரன் பாலசிங்கம் கடந்த கால தவறுகளுக்காக மன்னிப்பும் கோரினார். ஆனால் பாலசிங்கம் அவ்வாறான நகர்வை முன்னெடுத்த போது, காலம் அதிமாகவே கடந்திருந்தது.

சாந்தனின் அஞ்சலி நிகழ்வு மிகவும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. வழமையான கெடுபிடிகள் எவையும் இல்லை. நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், சாந்தனை ஒரு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொண்டனர். விடுதலைப் புலிகளின் கொடி போர்த்தப்படவில்லையே தவிர, ஏனைய அனைத்தும் நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளின் போது காண்பிக்கப்படும் எந்தவொரு கெடுபிடியும் இல்லை.
மக்கள் திரட்டப்பட வேண்டும், எந்தளவிற்கு மக்கள் திரட்டப்படுகின்றார்களோ – அந்தளவிற்கு அது தமிழ் தேசியத்திற்கு பலம் சேர்க்கும் என்று கதைகள் புனைவோர் உண்டு. அதனை புரிந்துகொள்ளும் திறனின்றி, தலைக்குள் போட்டுக்கொள்பவர்கள் உண்டு. ஆனால் புத்தியுள்ள ஒவ்வொரு தமிழரும், தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி, அவ்வாறு திரட்டப்படும் மக்கள், எந்த இலக்கின் அடிப்படையில் திரட்டப்படுகின்றார்கள்? இந்தக் கேள்வியின்றி, தலையாட்டினால், அவ்வாறு திரட்டப்படும் மக்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தின் மீது, மண்ணை வாரிப் போட்டுக்கொள்வர்.

ஏனெனில், அவ்வாறான மக்கள் திரட்சி, இறுதியில், அவர்களது பரந்துபட்ட நலன்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும். சாந்தனின் இறுதி நிகழ்வு இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சாந்தனின் இறுதி நிகழ்வு நன்கு திட்டமிடப்பட்ட வகையில், இந்திய எதிர்ப்பு என்னும் ஒற்றை இலக்கிற்காகவே பயன்படுத்தப்பட்டது. ராஜீவ்காந்தின் கொலையுடன் தொடர்புடைய ஒருவரை போற்றுவதும், அவருக்கு வணக்கம் செலுத்துவதும், சொல்லும் செய்தி என்ன? அந்தக் கொலை சரியென்று மக்கள் கருதுவதான தோற்றம்தானே காட்சிப்படுத்தப்படுகின்றது! இது எந்த வகையில் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும்?

2009இற்கு பின்னரான தமிழர் அரசியல் என்பது, அடிப்படையில் சர்வதேச அரங்குகளில் நீதியை கோரும் அரசியலாகும். மனித உரிமைக் கோரிக்கையே தமிழர் அரசியலின் அடிப்படையாக காண்பிக்கப்படுகின்றது. ஒரு நாட்டின் பிரதமரின் கொலையில் சம்மந்தப்பட்டவரை, போற்றுவதன் ஊடாக, தமிழ் மக்கள் சர்வதேச சமுகத்திற்கு முன்னால் தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர்? இவ்வாறான செயற்பாடுகள், தமிழ் மக்கள் ஒரு பாதிக்கப்பட்ட இனம் என்னும் உணர்வை வழங்குமா?

இவ்வாறான நினைவு கூர்தல் நிகழ்வுகளுக்கிடையில் ஒரு ஒற்றுமையிருப்பதை காணலாம். ஒப்பீட்டடிப்படையில் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள், பெரியளவில் கெடுபிடிகளின்றி அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஏனைய மாவீரர் தின நிகழ்வுகள் அவ்வாறான சுதந்திரத்தோடு அனுமதிக்கப்படவில்லை. திலீபனின் நினைவு தினம், அதே போன்று, பூபதியின் நினைவு தினம் ஆகியவை, இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்திற்குரியவை.

இந்த நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள், தங்களின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கே இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம், விடுதலைப் புலிகளின் காலத்து, இந்திய எதிர்ப்பை புதிய தலைமுறையினருக்குள் புகுத்த முற்படுகின்றனர். இந்தியாவின் அணுகுமுறையால்தான் குறித்த மரணங்கள் நிகழ்ந்ததாகவே இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கப்படுகின்றது. அதே போன்றுதான் சாந்தனின் இறுதி நிகழ்வும் திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் சாந்தனின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டாலும் கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறான விடயங்களால், யாருக்கு நன்மை – நிச்சயமாக தமிழ் மக்களுக்கு நன்மையில்லை.

சாந்தனின் நிகழ்வின் போதும் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த நிகழ்வுகள் மிகவும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே, வெடுக்குநாறி சிவன் ஆலத்தின் சிவராத்திரி நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இது எதனை உணர்த்துகின்றது? இந்திய எதிர்ப்பு அரசியலுக்கான வாய்ப்புக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனவா? இதற்கு பின்னாலுள்ள தந்திரத்தை தமிழ் சமூகம் புரிந்துகொள்ளவில்லையா? இந்த விடயங்களை கண்டிக்க வேண்டிய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்போர், சிவில் சமூகக் குழுக்கள் என்போர், புத்திஜீவிகள் என்போர் ஏன் மௌனமாக இருக்கின்றனர்?

புலம்பெயர் சமூகத்தில் தங்களை முன்னேறியவர்களாக காண்பித்துக் கொள்ளுபவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றனர்?
தமிழ் மக்களுக்கான போராட்டத்தின் பெயரால் ஏராளமான இழப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அனைத்து இயக்கங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்களின் உயிர்களை தியாகம் செய்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான ஆளுமையுள்ள தலைவர்களின் உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றால் தமிழ் மக்கள் கண்டது என்ன? இப்போது தமிழ் மக்கள் எந்த இடத்தை வந்தடைந்திருக்கின்றனர்?

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் போதிய தியாயங்களை செய்திருக்கின்றனர். அவர்களது தியாகங்களில் போலித்தனம் இல்லை. ஏனெனில் ஒரு மனிதன் தன்னுயிரை கொடுக்கும் விடயத்தில் போலித்தனமாக இருக்க முடியாது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? முள்ளிவாய்க்காலில் – அனைவரது தியாகமும் – ஜயோ காப்பாற்றுங்கள் என்னும் அபயக் குரலில்தானே தஞ்சமடைந்தது. அந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு நாடும், தமிழ் மக்களை காப்பாற்ற வரவில்லையே!
ஏன்? ஏனெனில் தமிழ் மக்களுக்கு பலமான நட்பு நாடு ஒன்றில்லை. இந்தப் பிராந்தியத்தில் அவ்வாறானதொரு நட்பு நாடு இருக்க முடியுமென்றால், அது இந்தியா மட்டும்தான். என்னுடைய எழுத்துக்களில் தொடர்ந்தும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றேன். அதாவது, இந்தியாவின் நட்பு என்பது தமிழ் அரசியலுக்கான அஸ்திபாரமாகும். இன்னொருவகையில் அது ஒரு பிராந்திய யதார்த்தமும் கூட. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறியதால்தான், விடுதலைப் புலிகளை காப்பாற்ற எவரும் இருக்கவில்லை.

கடந்தகாலம் நமக்கு போதிய படிப்பினைகளை தந்திருக்கின்ற போதும் கூட, ஏன் நாம் தொடர்ந்தும், கற்றுக்கொள்ள மாட்டோமென்று, அடம்பிடிக்கின்றோம். இன்று தமிழர் அரசியலின் பெயரால் இடம்பெறும் விடயங்களை உற்று நோக்கினால் தமிழ் மக்கள், ஒரு மொக்கு சமூகமா – என்னும் கேள்வியல்லவா நம்மை தலைகுனிய வைக்கின்றது.
இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் கூட, தமிழ் சமூகத்தினால் புத்திசாதுர்யமாக சிந்திக்க முடியவில்லையாயின், செல்வநாயகம் கூறியது போன்று, தமிழ் மக்களை அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ஆனால் அந்தக் கடவுளும் கூட, இவ்வாறானதொரு மொக்கு மக்கள் கூட்டத்தை காப்பாற்றுவாரா என்பது கேள்விக்குறிதான்.

எழுதியது:
யதீந்திரா

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் மல்வத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு
செய்திகள்

சம்மாந்துறையில் மல்வத்தை பகுதியில் கசிப்பு உற்பத்தி பொருட்கள் மீட்பு

May 20, 2025
இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனை திரவியங்களை கைப்பற்றிய கடற்படையினர்
செய்திகள்

இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனை திரவியங்களை கைப்பற்றிய கடற்படையினர்

May 20, 2025
”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்
செய்திகள்

”Take Care – வீதிகளை பாதுகாப்போம்” எனும் திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து அமுல்

May 20, 2025
தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு
செய்திகள்

தான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

May 20, 2025
பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்
செய்திகள்

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதிகளின் சாயம் விரைவில் அம்பலப்படுத்தப்படும்; பாதுகாப்பு அமைச்சர்

May 20, 2025
கைதான முன்னாள் அமைச்சர் கெஹெலியவிற்கு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

கைதான முன்னாள் அமைச்சர் கெஹெலியவிற்கு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

May 20, 2025
Next Post
தனியாருக்கு வழங்கப்படவுள்ள யாழ் சர்வதேச விமான நிலையம்!

தனியாருக்கு வழங்கப்படவுள்ள யாழ் சர்வதேச விமான நிலையம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.