மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடியிருந்துவரும் 375 குடும்பங்களுக்கு பொலிஸாரின் அனுசரணையுடன் மாபியா குழு ஒன்று தொல்லை கொடுத்து வருவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் காரியாலயத்தினை முற்றுகையிட்டு பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணி மாபியா குழு ஒன்று அத்துமீறி உள்நுழைந்து குடிசைகளை உடைத்து குடிசைகளுக்கு தீயிட்டு அட்டகாசம் செய்துவருதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாலையடிதோணா என்ற பிரதேசத்திலுள்ள அரச காணியில் காணி இல்லாத வறிய மக்கள் கடந்த 4 வருடத்திற்கு முன்னர் காடுகளை சுத்தம் செய்து ஒருவருக்கு 10 பேச் என்ற அடிப்படையில் 375 குடும்பங்கள் குடிசையமைத்து பயிர் செய்கை செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் உட்பட 4 பேர் கொண்ட காணி மாபிய குழுவினர் கடந்த மாதம் குறித்த காணிக்குள் உள்நுழைந்து இது தங்களது காணி எனவும் எல்லோரும் காணியில் இருந்து வெளியேறவேண்டும் என அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் காணி மாபியா குழுவினருக்கு எதிராக குரல்கொடுத்த ஒருவருக்கு பொலிஸார் கஞ்சாவை வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இனையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பு கொண்டு நீதியாக செயற்படுமாறும் அத்துமீறி குடிசைகளை எரித்த காணி மாபியா குழுவினரை கைது செய்யுமாறு கட்டளையிட்டதையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.