வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆளுநர்களை உடனடியாகப் பதவி விலகுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் அந்தப் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் உதவியை நாடியுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
தமது பதவிகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டள்ளனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆளுநர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் “அவர்களுக்கு அரசியல் தெரியாது; அரசியல்வாதிகளை மதிக்கத் தெரியாது. இராணுவத்தைப் போல் தங்களுடன் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்” என்றெல்லாம் அவர்கள் முறைப்பாடு செய்தனர்.
கடந்த வாரம் நடைபெற்ற அரச எம்.பிக்களின் கூட்டத்தில் கூட ஜனாதிபதியிடம் இதே முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதிலும், ஆளுநர்கள் வசந்த கருணாகொட,ரொஷான் குணதிலக ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்தனர்.
இவர்கள் விலகியே தீர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ‘மொட்டு’க் கட்சிகளின் ஆதரவு தனக்குத் தேவை என்பதால் ஜனாதிபதி, அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆளுநர்களை விலகுமாறு உத்தரவிட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.