தொல்பொருள் திணைக்களத்துக்கு பிக்குகளிடமிருந்து பணம் வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஜனாபதியுடனான சந்திப்பின்போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் தொல்பொருள் திணைக்களம் அரசின் அங்கமாக இருந்தபோதிலும்கூட அதனை அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பவர்களே இயக்கிவரும் உண்மை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இதனை வெளிக்கொண்டு வந்தமைக்காக ரணிலுக்கு நன்றி சொல்லலாம்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும்கூட தொல் பொருள் திணைக்களம் அதன் செயல்பாடுகளை நிறுத்தியிருக்கவில்லை. தற்போது பௌத்த மயமாக்கல் – குறிப்பாக, இந்து ஆலயங்களை இலக்குவைத்து இடம்பெறும் நகர்வுகள் அனைத்துமே பௌத்த பிக்குகளின் திட்டமிட்ட செயல்பாடுகள் என்பது தெளிவாகியிருக்கின்றது. இலங்கைத் தீவில் அரசியல் கட்சிகள், அரச அதிகாரிகளுக்கு அப்பால் இரகசிய அதிகாரகட்டமைப்பு ஒன்று இயங்கிவருகின்றது. அது அரசின் அதிகார எல்லைக்கு வெளியிலிருந்து அரசாங்கத்தையும் அரச கட்டமைப்புக்களையும் திரை மறைவில் இயக்கி வருகின்றது.
தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியுற்ற காலத்திலிருந்து தமிழரின் தனித்துவமான அரசியல் இருப்பை பலவீனப்படுத்துவதில் பௌத்த மதக்கட்டமைப்பும் சிங்கள அரசியலும் பின்னிப்பிணைந்தே இயங்கிவருகின்றன. இப்போது ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்களத்தை எச்சரித்தாலும்கூட, ஒரு கட்டத்துக்கு மேல் பௌத்த- சிங்கள கட்டமைப்புகளை புறம்தள்ளிச் செயலாற்றக்கூடிய வல்லமையுள்ள அரசியல் தலைவர்களை இன்னும் தென்னிலங்கை காணவில்லை.
தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல்களின்போது, ஒருவரை விடவும் மற்றவர் நல்லவர் என்னும் அடிப்படையில் நபர்களை தெரிவு செய்தாலும்கூட, எவரும் சிங்கள – பௌத்த கட்டமைப்புகளின் பிரத்தியேக வேலைத்திட்டங்களை கேள்விக்கு உள்ளாக்கக்கூடிய தகுதி நிலையில் இருந்ததில்லை. ஒப்பீட்டு அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை வெளிப்படையாகப் பேசினாலும்கூட, அவராலும் பௌத்த – சிங்கள கட்டமைப்புகளின் இரகசிய நகர்வுகளை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது.
இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவு என்ன? முதலில் வடக்கு – கிழக்கில் தமிழர்கள் அதிகாரத்தை முடிந்தவரையில் கையாளக்கூடிய நிலையிலிருக்க வேண்டும். தற்போதைய சூழலில், மாகாண சபை முறைமை ஒன்றுதான் தமிழர்கள் அதிகாரத்தை கையாள்வதற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகும். இதனை மறுதலிக்கும் ஒரு குழுவினர் இருக்கலாம் – ஆனால், அவர்களால் தாங்கள் கூறும் விடயத்தில்
இதுவரையில் சிறியளவில்கூட முன்னேற்றத்தைக் காண்பிக்க முடிய வில்லை. அவர்கள் அடிப்படையில் தோல்வியடைந்த தரப்பினராவர்.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரம்பத்திலிருந்தே யதார்த்தமாக பேசி வருபவர்களின் வாதமே நடைமுறையில் வெற்றி பெற்றிருக்கின்றது. அந்த வகையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டுயதார்த்தபூர்வமாக சிந்திப்பவர்கள் அனைவருமே மாகாண சபை முறைமையை பயன் படுத்துவதிலுள்ள சாதகமான அம்சங்களை புரிந்து கொண்டிருக்கின்றனர்.
மக்களும் யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றனர்.இந்தப் பின்புலத்தில் பௌத்த – சிங்கள ஆக்கிரமிப்பு நகர்வுகளை முடிந்தவரையில் தடுக்க வேண்டுமாயின், மாகாண சபை முறைமை இயங்கு நிலையில் இருக்கவேண்டும். அதனை பயன்படுத்திக் கொண்டுதான் விடயங்களை தமிழர்களால் கையாள முடியும். வெறுமையிலிருந்து எதனையும் செய்ய முடியாது. 13ஆவது திருத்தச் சட்டத்தில், வடக்கு – கிழக்கின் தொல்பொருள் அடையாளங்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஆனால், அதனை தமிழ்
அரசியல் தரப்பினர் முறையாகக் கையாளவில்லை. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது, இது தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கமுடியும். ஆனால், கட்சி
சண்டைகளிலேயே மாகாண சபை நிர்வாகத்தை மூழ்கடித்தமையால், சாதகமான விடயங்களை கையாளவில்லை. சிங்கள – பௌத்த கட்டமைப்பை ஒருபோதுமே வெறுமையிலிருந்து எதிர்கொள்ள முடியாது.