முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் 10 வயது சிறுமியை கடத்த முயன்றதாக கூறப்படும் நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தை தனது தாயுடன் கல்வி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த போது, சிலர் கடத்த முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களில் ஒருவரால் சிறுமியின் முகத்தில் தீங்கு விளைவிக்கும் திரவம் வீசப்பட்டதாகவும், அதன் பிறகு குழந்தை தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள் உடனடியாக குழுவிலிருந்த ஒருவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். முல்லைத்தீவைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேக நபர் இன்று (மே 14) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறுமியின் தந்தை தாயைப் பிரிந்து திருகோணமலையில் வசிப்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, தற்போது முல்லைத்தீவு மாஞ்சோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.