மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று (15.05.2023) காலை மீட்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை நிலவு நிலையில் கடலுக்கு செல்லவேண்டாம் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் கவலையீனமாக செயற்படுவோரால் தினமும் இளம் பிள்ளைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவருகின்றன.
அதன்படி கடந்த வாரம் மட்டக்களப்பு சவுக்கடி கடலில் மட்டக்களப்பு கறுப்பங்கேணி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்றும் அவ்வாறானதொரு சம்பவம் பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார்.
பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இன்று (15.05.2023) காலை காணாமல்போன குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.