ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை (26) இரவு நடைபெற்ற 4 x 400 மீட்டர் கலப்பின தொடர் ஓட்டப் போட்டியிலேயே இலங்கைக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்தது.
அப் போட்டியை 3 நிமிடங்கள், 28.18 செக்கன்களில் நிறைவு செய்தே இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றது.
வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் ஜத்யா கிருல (காலி மஹிந்த), ஜித்மா விஜேதுங்க (வத்தளை லைசியம்), தேமிந்த அவிஷ்க ராஜபக்ஷ (குருநாகல் மலியதேவ), தக்ஷிமா நுஹன்சா கொடிதுவக்கு (மாத்தறை மத்திய கல்லூரி) ஆகியோர் இடம்பெற்றனர்.
அப் போட்டியில் சீனா (3:22.46) தங்கப் பதக்கத்தையும் இந்தியா (3:24.86) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை முப்பாய்ச்சலில் நெத்மிகா மதுஷானி ஹேரத் இரண்டு தினங்களுக்கு முன்னர் வென்றிருந்தார்.
இதேவேளை, ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் தகுதிகாண் போட்டியை 40.32 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணி 20 வயதுக்குட்பட்டோருக்கான புதிய தேசிய சாதனையை நிலைநாட்டி இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.