இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மேதினக் கூட்டமானது பெரிய கல்லாறு மற்றும் கோட்டைக் கல்லாறு வட்டாரக் கிளையினரின் ஏற்பாட்டில் பெரிய கல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் தனித்துவமான ஒரு மே தின நிகழ்வாக அமைந்திருந்த இவ் நிகழ்வின் பேரணியானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களது களுவாஞ்சிக்குடி காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லாற்றினை வந்தடைந்தது.இந்தப் பேரணியில் தமித் தேசிய போராட்டம், தமிழின உரிமையினைப் பிரதிபலிக்கும் வண்ணம் பல ஊர்திகளில் கலை அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
குறித்த ஊர்திகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதேசக் கிளையினர் ஏற்பாடு செய்ததுடன் ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்தும் பெரும்ளவிலான மக்களும் பங்குபற்றி இருந்தனர்.
மேதின அரங்கு நிகழ்வுகளில் ஆழ்கடல் மீனவர், நன்னீர் மீனவர், விவசாயிகள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொழிலாளிகள் சார்பாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மே தின அறிக்கைகள் வாசிக்கப்பட்டன.
அதிதிகளின் பேச்சுக்கள், நடன நிகழ்வுகள், கவிதை அரங்கு மற்றும் நாடகம் என்பன இடம்பெற்றதுடன் நிகழ்வு நிறைவடைந்தன.
இந் மே தின நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் குகதாசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, முன்நாள் மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை, பிரதேசக் கிளைகள், வட்டாரக் கிளைகளின் அங்கத்தவர்கள், கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.