அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில் இடம் பெற்றது.
ஜப்பான் நாட்டு சிறுவர் நிதியத்தின் அனுசரனையில் வவுணதீவு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்கு 60 துவிச்சக்கர வண்டிகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர் நிதியத்தின் அனுசரனையில் வவுணதீவு கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மண்முனை மேற்கு கல்வி வலய பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் மற்றும் அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்துள்ளனர்.
அத்தோடு குறித்த நிகழ்வில் அக்ஷன் யுனிட்டி லங்கா சிறுவர் வழநிலையத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் செயற்திட்டத்தில் இணைந்து சர்வதேச நீதியில் சாதனை படைத்த 28 மாணவகளுக்கும் இதன் போது சர்வ தேச சான்றிதழ் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், திட்ட பணிப்பாளர் சுதர்சன், பணிப்பாளர் சபை தலைவி ஜே.மகேஸ்வரி, செயளாலர் கே.சத்தியநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் AU Lanka நிறுவனமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இளைஞர்கள், சிறுவர்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களின் தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட சமூகம்சார் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.