ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த மனதை ஒருநிலைப்படுத்தி, வலுப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (20) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது
தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் ஆலோசனையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.
மீதிரிகல ஆரண்ய சேனாசனவாசி வணக்கத்திற்குரிய ஹோமாகம தம்மகுசல தேரர் மாணவர்களுக்கு தியானம் மேற்கொள்வது பற்றிய நடைமுறை பயிற்சிகளை இதன்போது வழங்கினார்.
இங்கு சிறப்புரையாற்றிய கங்காராம விகாராதிபதியான கிரிந்தே அஸ்ஸஜி தேரர், நாட்டின் எதிர்காலம் சிறுவர் தலைமுறையைச் சார்ந்தது எனவும், நாட்டின் சிறுவர்களின் அறிவு, கல்வி, திறமை, திறன் என்பவற்றிலே நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒழுக்கமும் திறமையும் கொண்ட சிறுவர் தலைமுறையை உருவாக்குவதற்கு மனதை ஒருநிலைப்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.