புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (23.05.2024) பகல் புத்தளம் – முந்தலம் 61 ம் சந்தியில் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கோவில் சந்தி – வில்பொத பகுதியை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹலவத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று காற்றினால் இரண்டு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மற்றைய யுவதி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நேற்று (23) காலை நிலவரப்படி, மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.
கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக மரங்கள், உடைமைகள், வீடுகள் வீழ்ந்தமை உட்பட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், களு கங்கையின் அத்தனகலு வடிநிலம் மற்றும் குடோ கங்கை உப வடிநிலங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இதேவேளை, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.