மனக்கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் குறிப்பாக நாட்டில் ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வீதிநாடகங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் பெப்ரிக் பார்க் அமைக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு ஒழுங்கு செய்யப்பட்ட வீதி நாடகம், ஏறாவூர் பொதுச் சந்தையில் நடாத்தப்பட்டதுடன். இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
அதேசமயம் கட்டுநாயக்க, அவிஸ்ஸாவெல்ல, துல்ஹிரிய,திருகோணமலை மற்றும் நாவலப்பிட்டிய போன்ற ஏழு இடங்களில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன், பெட்டர் வேர்க் திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பகுதி அமைப்புக்களான ஐ.எல்.ஓ, உலக வங்கியின் ஐ.எப்.சி ஆகிய நிறுவனங்களுடன், பி.ஓ.ஐ நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உளரீதியில் பாதிக்கப்பட்ட மற்றும் மன அழுத்தங்களுடன் வாழுகின்ற பெரும்பாலானவர்கள் உள நல ஆலோசனைப் பெறுவதில்லை. இதனால் குடும்ப வாழ்க்கையில் மகிழச்சியின்மை, தொழில் தளங்களில் உற்பத்தி குறைவு, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குதல், போதைப்பொருள் பாவனை மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்றவை இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐ.எல்.ஓ திட்ட தலைமையதிகாரி முரளி கணபதி தெரிவித்தார்.