மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தருமான பா. அரியநேந்திரன் தங்களின் தலைவர் யாரென்று தெரியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். கதிரையில் ஒரு தலைவரை பார்த்த நாங்கள் இப்போது பத்து தலைவர்களை கதிரையில் காண்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் தமிழரசு கட்சிக்குள் நிகழும் தலைமைத்துவ போட்டி தொடர்பிலேயே அரியநேந்திரன் கவலைப்படுவது தெளிவாகின்றது.
அரியநேந்திரன் கூறுவது உண்மைதான் – தமிழரசு கட்சியின் உண்மையான தலைவர் யாரென்று எவருக்கும் தெரியவில்லைதான். இந்தப் பின்புலத்தில்தான் அவ்வப்போது கட்சியின் தலைவர் யார் என்னும் கேள்வி ஊட
கங்களில் செய்திகளாகின்றன. கட்சியிலுள்ள பலரும் அவ்வப்போது, தான் தலைமையை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிடுகின்றனர்.
2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியலில் சம்பந்தனை அனைவருமே ஒரு தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தவிர, தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய கட்சிகள் அனைத்துமே சம்பந்தனை தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர். இந்த அடிப்படையில்தான், சம்பந்தன் தொடர்ந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்க முடிந்தது. சம்பந்தன் தற்போது நோய்வாய்ப்பட்டு அரசியலைதீர்மானிக்கும் தகுதிநிலையை பெருமளவுக்கு இழந்திருக்கின்ற நிலையில்தான், தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பான கேள்விகள் எழுந்திருக்கின்றன. சம்பந்தன் தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின்னரும்கூட கட்சியை கட்டுப்
படுத்தும் ஒருவராகவே இருந்தார்.
அரசியலில் சம்பந்தனின் தவிர்க்க முடியாமையே இதற்கான காரணமாகும். ஆனால், சம்பந்தனைப் போன்று தான் பொறுப்பிலிருந்து வெளியேறுகின்றேன். பிறிதொருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்- என்று மாவை சேனாதிராசாவால் கூற முடியாது. ஏனெனில், அதன் பின்னர் கட்சிமீதான முழுக் கட்டுப்பாட்டையும் அவர் இழந்துவிடுவார். இந்த நிலையில் தான், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்னும் கேள்வியும் தங்களின் தலைவர்யார் என்று தங்களுக்கு தெரியவில்லையென கட்சியின் உறுப்பினர்கள் கவலைப்படுகின்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
ஆளுமையுள்ளவர் எவரோ அவர்கள் கட்சியில் என்ன பொறுப்பில் இருந்தாலும் அவர்களை மற்றவர்களால் தவிர்க்க முடியாமல் போகும். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் சுமந்திரன் இல்லாத தமிழரசு கட்சியை கற்பனை செய்வது கட்சியிலுள்ள பலருக்கு இயலாத காரியமாக இருக்கலாம். இதனை சுமந்திரனே ஒருமுறை வேறு விதமாகக் கூறியிருந்தார். எவரும் தலைவராக இருக்கலாம் ஆனால், தீர்மானங்கள் எவரால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதே முக்கியமானது. ஆளுமையுள்ளவர்களின் கருத்துகளே இறுதியில் கட்சியின் தீர்மானமாக மாற்றமடையும்.
தவிர, தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் பிறிதொரு சிக்கலான பக்கம் – கட்சியில் ஒருவரின் இடமென்பது அவரின் பாராளுமன்ற உறுப்புரிமையால் தீர்மானிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாதவர்களுக்கு கட்சியில் குரல் இல்லாமல் போய்விடுகின்றது. மாவை சேனாதிராசா தேர்தலில் தோல்வியடைந்த நிலையில்தான் அவரின் குரல் நலிவுற்றது. இது ஆரோக்கியமானதல்ல. ஆனால், இதுதான் தற்போது தமிழ் கட்சிகளின் அரசியலாக இருக்கின்றது.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து விட்டால் அதன் பின்னர் ஒருவரின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் வெறும் தேர்தல் அரசியலாக சுருங்கிவிட்டது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். ஒருவர், பாராளுமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்கூட, அவரின் தலைமைத்துவத்தை எவராலும் தாண்டிச் செல்ல முடியாமல் இருக்க வேண்டும். அவ்வாறான தகுதிநிலையில் இருக்கும் ஒருவர்தான் மக்களின் தலைவராக இருக்க முடியும். இவ்வாறான தலைமைத்துவமானது, வாக்குகளால் உருவாவதில்லை. உண்மையில் எவரை பின்தொடர்வதற்கு மக்கள் இருக்கின்றார்களோ – அவரே தலைவராவார். இந்த தகுதிநிலையுடன் இப்போது எவருமே இல்லை. எனவே, தமிழ் மக்களுக்கு ஆற்றல்மிக்க தலைமையென்று ஒன்றில்லை என்பது உண்மைதான்.