வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் ஜீப் வண்டி ஒன்று வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம்நேற்றையதினம் (04) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.
விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.
நெடுங்கேணி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.