கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றத்திற்கு காட்டுவழி பாதையூடாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்த அடியார்களுக்கான பாதை திறப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் இன்று (07) அம்பாறை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் லகுகல பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், லகுகல, திருக்கோவில், அக்கறைப்பற்று, காரைதீவு, கல்முனை ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், இந்து, பௌத்த மதகுருமார்கள், தொண்டர் அமைப்புக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி பாதை மூடப்படும் என உத்தியோக பூர்வமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத் தீர்மானமானது அம்பாறை மாவட்ட அராசாங்க அதிபர் மற்றும் மொனறாகலை அரசாங்க அதிபர்களினால் எடுக்கப்பட்டுள்ளது. இம்முறையும் காட்டுவழிப்பாதை ஊடாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்த அடியார்களுக்கு தொண்டர் அமைப்புக்களினால் குடிநீர், சுகாதார சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
கதிர்காமம் முருகன் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 21 ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது. தற்போது கிழக்கில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.