சர்வதேச தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பு நடாத்திய டிப்ளோமா மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் பட்டமளிப்பு விழா கல்முனையில் இடம்பெற்றது.
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பினால் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவானது கடந்த புதன்கிழமை (12.06.2024) கல்முனை கானான் திருச்சபை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது
இப்பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான ஜீவா சுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், பயிற்ச்சியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்களையும் பட்டத்தினையும் வழங்கி வைத்திருந்தார்.
அதிதிகள் மங்கள வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து, பிரதான நிகழ்வுகள் இடம் பெற்றன.
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) சமூக நல உதவுங்கள் அமைப்பினால் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருதிக் கொண்டு ஆரீ பயிற்சி, தையல் பயிற்சி, வர்ண கேக், சமையல் கலை பயிற்சி, கணணி பயிற்சி, கையடக்க தொலைபேசி திருத்துனர் பயிற்சி, இசைக்கலை பயிற்சி, ஆங்கில மொழி வகுப்புக்கள், பரயோக வகுப்புக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான டிப்ளோமா ரூ சேர்ட்டிபிக்கேட் அனைத்து நெறிகளும் முற்றிலும் இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த டிப்ளோமா பயிற்சி நெறியினை நிறைவு செய்த 85 யுவதிகளுக்கு இதன் போது டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தேவ மகிமை ஊழியங்களின் (GOGM) குறித்த சமூக நல உதவுங் கரங்கள் அமைப்பானது தொடர்ச்சியாக தேசிய ரீதியில் நலிவுற்ற மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி வளப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட உதவி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.