100 நாட்களில் 200 விமானங்களில் பயணம் செய்த நபர், விமான பயணிகளிடம் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுடெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் கபூர், ஐதராபாத்-புமடெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு இடையே உள்ளூர் உள்நாட்டு விமானங்களில் அடிக்கடி பயணம் செய்தார்.
விமானத்தில் பயணித்த பெண்களை அடையாளம் கண்டு, தன்னுடன் எடுத்துச் சென்ற தோள் பையை பெண் பயணிகளின் கைப்பைகளுக்கு அருகில் ராகேஷ் வைத்திருந்தார்.
பயணத்தின் போது, பெண்கள் கழிவறைக்குச் செல்லும்போதெல்லாம், ராகேஷ் அவர்களின் பைகளைத் திறந்து, நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடினார்.
இந்த திருட்டு குறித்து ஐதராபாத் விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பொலிஸார் அவதானித்து, ராகேஷ் கபூரை அடையாளம் கண்டனர்.
அவரை பிடித்து விசாரித்ததில் விமானங்களில் அவர் பயணிகளிடம் நகை, விலை உயர்ந்த பொருட்கள் திருடியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்ததுடன் அவருடைய கூட்டாளி தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
“இதுவரை ராகேஷ் 100 நாட்களில் 200 விமானங்களில் பயணம் செய்துள்ளார், கிட்டத்தட்ட எல்லா விமானங்களிலும் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்த பொலிஸார், அவர் மீது ஐதராபாத் மற்றும் ரச்சகொண்டாவில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.