உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதற்கு தானும் அணியும் முழுப் பொறுப்பேற்பதாக இலங்கை T20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றிருந்தது.
போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை கூற வேண்டுமென்றால் மிகவும் வருத்தமாக உள்ளது. எமது கிரிக்கெட் அணி ஒரு சிறந்த அணியாகும்.
எனினும் எமது துரதிஷ்டம் முதல் போட்டிகளில் சிறப்பாக செயற்பட முடியாமல் போனது. இந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி தாமதமாக கிடைத்த வெற்றியாகும்.
கடந்த உலகக்கிண்ணத் தொடரிலும் இந்த உலகக்கிண்ணத் தொடரில் நாம் எமது குறைகள் தொடர்பில் பேசினோம். எனினும் நாம் அதனை இன்னும் சரிசெய்யவில்லை.
தோல்வியின் பின்னர் பல காரணங்களை எமக்கு கூற முடியும். தொழில்முறை கிரிக்கெட் வீரர்களாகிய எங்களுக்கு அது நல்லதல்ல.
மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அந்த ஆடுகளத்திலே விளையாடுகிறார்கள். எனவே நாம் அதை மாற்றியமைக்க வேண்டும். நானும் அணியும் ஒரு குழுவாகவும் தலைவராகவும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.