தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஏதிலி அந்தஸ்து தமது சுதந்திரத்தையும் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றாலும் தனியார் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை, அரச வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
எனவே அவர்களில் பலர் அன்றாடக் கூலி வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஈழ ஏதிலிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஏதிலிகள் தாயகம் திரும்ப அல்லது தங்கள் உறவினர்களைப் பார்க்க விரும்பினாலும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவில் அதிக காலம் தங்கினால் ஆண்டுக்கு தலா 3600 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் அத்துடன் வீசாவைப் பெறுவதற்கு 13,500 ரூபாவை செலுத்தவேண்டியுள்ளதாக ஏதிலியாக வாழ்ந்துவரும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளருமான ஜி ஞானராஜா தெரிவித்தார்.
ஞானராஜா 1983 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கிளிநொச்சியை விட்டு தனது பெற்றோருடன் இந்தியாவிற்கு சென்றார்.
33 வருடங்கள் ஆகியும் தமக்கும் குடும்பத்தினருக்கும் நிவாரண அட்டையோ, ஆதார் அட்டையோ வழங்கப்படவில்லை, ஈழ ஏதிலிகள் என்ற அடையாள அட்டைகள் மட்டுமே உள்ளன என்று ஞானராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் ஏதிலிகளில் சுமார் 20,000 பேர் சிறிலங்காவுக்கு திரும்ப விரும்புவதாக ஞானராஜா ஒப்புக்கொண்டாலும், நாட்டில் உள்ள சமூக-அரசியல் நிலப்பரப்பு பலருக்கு நம்பிக்கையைத் தூண்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.