தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் ( Elliot Colburn) கண்டித்துள்ளார்.
தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய அட்டுழியங்கள் இனப்படுகொலைகளிற்கான நீதி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குரல்கொடுக்கும் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் அச்சம் தரும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் எலியட் கொல்பேர்ன் ( Elliot Colburn) குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மெக்டொனாக்கும் கண்டித்துள்ளார்.
அதேசமயம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்தமை மகிழ்ச்சி என தென்னிலங்கையில் இனவாதத்தை கக்கி வருபவரும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“காவல்துறையினரது செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ததாக நல்ல செய்தி கிடைத்துள்ளது.
இதற்காக எமது காவல்துறைக்கு மரியாதை செலுத்துகின்றோம்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், தாம் நீதித்துறைக்கு மேல் உள்ளதாக அது வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அது அப்படி இல்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்மூலம் நாம் நினைவுபடுத்துகிறோம்.
முக்கியமாக கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராகிய பின் காவல்துறைக்கும், இராணுவத்திற்கும் இடையூறு விளைவித்தது இது முதல் தடவை அல்ல.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வுகளைச் செய்யும் இடங்களில் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவங்களை பல தடவை நாம் கண்டுள்ளோம்.
தாம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இடையூறு விளைவிக்க அதிகாரம் இருக்கிறது என அவர் நினைக்கிறார்.
அது அப்படி இல்லை என ஞாபகப்படுத்த செய்யப்பட்ட இந்த கைது மூலம் காவல்துறையினருக்கு முதுகெலும்பு இருப்பதைக் கண்டு சந்தோஷமடைகிறோம்.
மேலும் காவல்துறை அதிகாரம் தொடர்பாக குறிப்பிடுகையில், கஜேந்திரகுமார் காவல்துறை அதிகாரம் மாகாண சபைக்கு கிடைக்க வேண்டும் என முதன்மையாக கருத்து தெரிவித்தவராவார்.
அவ்வாறு கிடைத்து இருந்தால், உதாரணமாக இச் சம்பவம் நிகழும் போது விக்னேஸ்வன் அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் கஜேந்திரகுமார் முதலமைச்சரை தொடர்புகொண்டு அவர் மூலம் காவல்துறை அதிகாரிகளை கீழ்படிந்து செல்லுமாறு பணித்து இருப்பார்.” என உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்திலும் பல சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கஜேந்திரகுமாரின் கைதை நியாயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.