மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான இரு வணபிதாக்களை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
குறி்த்த உத்தரவானது கடந்த 01ஆம் திகதி (01) பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளை இன்னொரு வழக்கான வணபிதா ஒருவரை அவதூறாக பேசி முகநூலில் பதிவேற்றம் செய்த ஒருவரை அதே தினத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.
குறித்த ஆயர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் 2ம் திகதி ஆயர் தலைமையில் வணபிதாக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அந்த கலந்துரையாடலை திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து அதனை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக அவர்ளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆயர் இல்லத்தினால் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்து அதனை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர் என சந்தேகத்தின்பேரில் இரு வணபிதாக்களுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேகநபர்களான இரு வணபிதாக்களை எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டார்.
அதேவேளை ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வணபிதா ஒருவரை அவதூறாகபேசி முகநூலில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வணபிதா முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வணபிதாவை அவதூறாகபேசி பதிவேற்றம் செய்த நபர் ஒருவருக்கு எதிராக கடந்த முதலாம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் வழக்கிற்கு முன்னிலையான எதிராளியையும் வழக்காளியையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வழக்கை ஒத்திவைத்தார்.