பாடசாலைகளில் தேங்காய் மட்டைகளை சேகரிக்கும் செயற்திட்டமொன்றை ஆரம்பிப்பதன் மூலம் வாரத்திற்கு சுமார் 1,30,000 ரூபா வருமானத்தை ஈட்டக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டில் காலி, நெலுவ தேசிய பாடசாலையுடன் இணைந்து பாடசாலைகளில் தேங்காய் மட்டைகளை சேகரிக்கும் முன்னோடி செயற்திட்டம் அண்மையில் அமுல்படுத்தப்பட்டதாகவும் அங்கு மாணவர்கள் 4,000 கிலோகிராம் தேங்காய் மட்டைகளை கொண்டு வந்ததாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்தார்.
தற்போது ஒரு கிலோ தேங்காய் மட்டையை 36 ரூபாவுக்கு தொழில்துறையினர் வாங்குகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் தேங்காய் மட்டைகளை சேகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் கைத்தொழில்துறையினரை இணைப்பதற்கும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை நேரடியாகத் தலையிடுமென்றும் தலைவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட மாணவர் நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.