யாழ்ப்ப்பாணம் நகர் பகுதியில் பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்த பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் நடாத்திய நபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகரினால் குறித்த பால் உற்பத்தி விற்பனை நிலையம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, பழுதடைந்த நிலையில் ஒரு தொகை தயிர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், விற்பனை நிலையத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமையும் கண்டறியப்பட்டது.
இவை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரினால் யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது விற்பனையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
அத்துடன் விற்பனை நிலையத்தில் காணப்படும் சுகாதார குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் விற்பனை நிலையத்தை சீல் வைத்து மூடுமாறு மன்று உத்தரவிட்டது.