ஐக்கிய மக்கள் குடியரசு கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, தனக்கு ஜனாதிபதியாக வருவதற்கான தகுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். நாடு ஜனாதிபதி தேர்தலொன்றை எதிர்கொள்ளவுள்ள நிலையில், யாருக்கெல்லாம் வேட்பாளராவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன – என்னும் கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது.
ஜனாதிபதிக்கான போட்டி என்பது அடிப்படையில் நபர்களுக்கு இடையிலான போட்டிதான். பலமான கட்சி பின்னணி தேவைப்பட்டாலும்கூட, போட்டியிடவுள்ள தனிநபர்கள் தொடர்பான மக்கள் அபிப்பிராயம் முக்கியமானது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் முற்றிலும் சாதகமானதோர் அபிப்பிராயம் நிலவியிருந்தது. அதற்கு பல காரணங்களும் இருந்தன.
ஒன்று, கோட்டாபயவுக்கு ஆதரவான வியத்மக அமைப்பு மத்திய தரவர்க்க மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் சாதகமான அபிப்பிராயங்களை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளுக்கு
எதிரான போர் வெற்றியையும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பின்னரான சூழலையும் அவர்கள் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றி நன்கு திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது. இதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னரே பல்வேறு குழுக்கள் திறம்பட செயலாற்றியிருந்தன. குறிப்பாக, பௌத்த ஆலயங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட நேரம் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஆபத்துகள் குறித்த பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. இவ்வாறானதொரு பின்புலத்தில் தான் கோட்டாபய ராஜபக்ஸ தனிச்சிங்கள வாக்கில் வெற்றிபெற முடிந்தது. அவர் எவ்வளவு வேகமாக செல்வாக்கின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டாரோ, அதேயளவு வேகமாகவே அறகலய என்னும் சிங்கள கிளர்ச்சியின் மூலம் வீழ்த்தவும்பட்டார்.
தற்போதுள்ள சூழல் முற்றிலும் வேறுபட்டது. சிங்கள கிளர்ச்சியின் மூலம் ஒரு ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார். அறகலய ஊடாக பதவிக்கு வந்தவரான ரணில் விக்கிரமசிங்க மீண்டும்
ஜனாதிபதியாவதற்கான திட்டங்களை வகுக்கின்றார். இந்த நிலையில், ஏனையவர்களும் குறிப்பாக சஜித் பிரேமதாஸ மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் வேட்பாளருக்கான தகுதி நிலையுடன் தங்களை அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். தற்போதுள்ள சூழலில், ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவம் மற்றும் அவருக்குள்ள சர்வதேச தொடர்புகள் மட்டுமே அவருக்கு சாதகமாக இருக்கின்றன. இதேவேளை சம்பிக்க போன்ற ஒருவரை பொது வேட்பாளராக்கி அவருக்கு ஏனையவர்கள் அனைவரும் ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் ரணிலின் திட்டங்கள் தோல்வியடையலாம்.
அவ்வாறானதொரு சூழல் ஏற்படுவதை எவ்வாறாயினும் தடுக்கவே ரணில் முயற்சிக்கக்கூடும். எனினும், நாடு பொருளாதார ரீதியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிலையில் முன்னேற்றத்தை இதுவரையில்
பதிவுசெய்யவில்லை. டொலரின் பெறுமதி வீழ்சியடைந்திருந்தாலும்கூட, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மீண்டும் ஒரு பொருளாதார முடக்கம் ஒன்று ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இறக்குமதியை தொடர்ந்தும் சுருக்குவதன் ஊடாகவும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. இதனை ரணில் எவ்வாறு சமாளிக்கப் போகின்றார் – என்பதில்தான் அவர்மீதான அபிப்பிராயம் தங்கியிருக்கின்றது. ஆனால், வேறு எவரும் நாட்டை முன்னெடுப்பதற்கு இல்லாத நிலையில்தான் ரணில் நாட்டை முன் கொண்டு செல்லும் பணியை பொறுப்பேற்றார். எனினும், பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அதனை தொடர்ந்தும் மக்களுக்கு சாதகமாகக் கொண்டு சென்றால் மட்டும்தான் ரணிலால் வெற்றியை அறுவடை செய்ய முடியும்.