ஆணாதிக்க சமூகத்தின் தோற்றம் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்கள் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர் என்கிறார் ஏஞ்சலா சைனி.மனித சமூகத்தின் வரலாற்றில் ஆணாதிக்க அணுகுமுறை எப்போது தொடங்கியது எப்படி என்பதை இங்கு காண்போம்.
லண்டன் மிருகக்காட்சி சாலையில் இருந்த ‘பபூன்’ வகை குரங்குகளின் காட்சிப் பகுதி மூடப்படும் என்று
1930இல் அதன் நிர்வாகம் அறிவித்தபோது அது தலைப்பு செய்தியானது.அந்த மிருகக்காட்சி சாலையில் பூபன் வகை குரங்குகள் இருந்த பகுதி ‘மங்கி ஹில்’ என்றே பல ஆண்டுகளாக அறியப்பட்டது. அங்கு குரங்குகளுக்குள் ரத்தக்களரியான வன்முறை சம்பவங்களும், அதன் விளைவான மரணங்களும் அவ்வபோது அரங்கேறும் காட்சிகளாக இருந்து வந்தன.
ஒரு நேரம், மங்கி ஹில்னின் வயதான குரங்கிற்கு சொந்தமான பெண் குரங்கை, அந்தக் கூட்டத்தின் இளம்
வயது குரங்கு ஒன்று அபகரிக்க முயன்றது. இதன் விளைவாக குரங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையின் முடிவில் பெண் குரங்கை இளம் வயது ஆண் குரங்கு கடித்துக் குதறி கொன்றது. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்காவின் டைம் இதழில் செய்தி வெளியாகியிருந்தது.ஆணாதிக்கம் குறித்த விலங்கின வல்லுநர்களின் கற்பனையில் மங்கி ஹில்லில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பபூன் குரங்கினத்தின் கொலைவெறி செயல் மனிதன் இயற்கையாகவே ஆணாதிக்க மனநிலை கொண்ட இனம் என்ற கட்டுக்கதைக்கு வலு சேர்த்தது. ஆனால் இயற்கையாகவே இந்த குரங்கினங்களில் வன்முறையில் ஈடுபடும் ஆண் குரங்குகள் பலவீனமான பெண் குரங்குகளை எப்போதும் பலி வாங்குபவையாக இருந்தன.
மங்கி ஹில்சில் பல ஆண் குரங்குகள் குறைந்த எண்ணிக்கையிலான பெண் குரங்குகளுடன் ஒன்றாக விடப்பட்டிருந்தன. இதன் விளைவாக அங்கு ஒரு விதத்தில் சிதைந்து போன சமூக சூழல் உருவானது.
மரபியல் ரீதியாக மனிதனுடன் தொடர்புடைய ‘போனாபோ’ வகை குரங்குகள், தாய்வழி பராம்பரியத்தைக் கொண்டவை என்று பல தசாப்தங்களுக்குப் பிறகு கண்டறியப்பட்டது.
இதையடுத்து நம் சொந்த இனங்களில் ஆணாதிக்கத்தை இயற்கையால் மட்டும் விளக்க முடியாது என்பதை
உயிரியல் வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டனர்.கடந்த சில ஆண்டுகளாகத் தனது ‘‘The Patriarch’’
புத்தகத்திற்காக, மனித ஆணாதிக்கத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிறேன் என்றார் ஏஞ்சலா சைனி.ஆண் இனத்துக்கு எப்படி அதிக அதிகாரம் வந்தது
என்பது பற்றிய பல கட்டுக்கதைகள் இருந்தாலும், இது தொடர்பான உண்மையான வரலாறு பாலின சமத்து
வத்தை நாம் எவ்வாறு அடையலாம் என்பது பற்றிய அறிவையும் அளிக்கக்கூடும் என்பதை அறிந்தேன் என்கிறார் அவர்.
‘தந்தையின் ஆட்சி’ எனப் பொருள்படும் ஆணாதிக்கம் என்ற வார்த்தை, ஆண்களை குடும்பத் தலைவர்களாகக் கருதுவதில் தொடங்கி, அவர்கள் தங்களின் அதிகாரத்தை மகன்களுக்குக் கடத்துவதாக நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்ததை பிரதிபலித்தது.ஆனால் இதுவே விலங்கினங்களின் உலகில் தலைமுறைகளுக்கு இடையிலான குடும்ப உறவுகள் தாய்வழி மூலமே தொடர்ந்து கட்டமைக்கப்படுகின்றன. தந்தை வழி மூலமாக அல்ல என்கிறார் நியூ மெக்சிகோ பல்கலைக் கழகத்தின் மானுடவியலாளரான மெலிசா எமெரி தாம்சன்.
தாய்வழி சமூகம்
மனிதர்களிடையே ஆணாதிக்கம் என்பது உலகளாவிய விஷயம் இல்லை. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டங்கள் முழுவதும் குறைந்தபட்சம் 160 தாய்வழி சமூகங்களை மானுடவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தச் சமூக மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் தாய்வழி குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக
உள்ளனர். மரபுரிமை தாய்மார்களிடம் இருந்து அவர்களின் மகள்களுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகங்கள் சில வற்றில் பெண் தெய்வங்களின் வழிபாடும் நடைமுறையில் உள்ளன. இந்தச் சமூக மக்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் தாய் வீட்டிலேயே வாழ்கின்றனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள மோசுவோ இன ஆண்கள், தங்களது குழந்தைகளின் வளர்ப்பைவிட, சகோதரிகளின் குழந்தைகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பது தாய்வழி சமூகத்துக்கான சிறந்த சான்றாகப் பார்க்கப்படுகிறது.
தாய்வழி சமூகங்களில் அதிகாரமும், செல்வாக்கும் பெரும்பாலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே
பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.கானாவில் உள்ள அசாண்டே எனும் தாய்வழி சமூகத்தில் தலைமைப் பொறுப்பு ராணிக்கும், ஆண் தலைவருக்கும் இடையே பகிரப்படுகிறது. அசாண்டே சமூக ஆட்சியில் ராணியாக இருந்த நானா யா அசந்தேவா, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ராணுவத்தை வழி நடத்தியவராகத் திகழ்ந்தார்.துருக்கியின் தெற்கு அனடோலியாவில் உள்ள 9,000 ஆண்டுகள் பழைமையான, கற்காலத்தை குறிக்கும் இமான கேட்டல்ஹோயக் ((Catalhoyuk)), அதன் அளவு மற்றும் அமைப்பின் அடிப்படையில் உலகின் மிகப் பழை மையான நகரம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்டது.
இங்கு கிடைத்த கிட்டத்தட்ட அனைத்து தொல்பொருள் தரவுகளும், இந்தக் குடியேற்றத்தில் ஆண், பெண்
பாலின அதிகாரங்களுக்கு இடையிலான சிறிதளவு வித்தியாசத்துடன் மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
2018ஆம் ஆண்டு வரை கேட்டல்ஹோயக் ஆராய்ச்சித் திட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஸ்டான் போர்ட்
பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளரான இயன் ஹோடர் கருத்துப்படி, “தொல்பொருள் ஆய்வில்
கண்டறியப்படும் தளங்களின் பெரும்பாலானவற்றில், ஆண்களும், பெண்களும் வெவ்வேறு வாழ்க்கை மற்றும் உணவு முறையைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.ஆனால் கேட்டல்ஹோயக் குடியேற்றத்தில் ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உணவுமுறையைக் கொண்டிருந்தனர். இரு பாலினத்தவரும் வீட்டுற்கு உள்ளேயும், வெளியேயும் ஒரே அளவில் நேரத்தைச் செலவிட்டனர்.
ஒரே வகையான வேலைகளையே அவர்கள் செய்தனர். பாலினங்களுக்கு இடையிலான உயர வேறுபாடும்கூட குறைந்த அளவே இருந்தது,” என்கிறார் அவர்.கேட்டல்ஹோயக் மற்றும் பிற இடங்களில் ஒரே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் ஏராளமான பெண் சிலைகள் கண்டறியப்பட்டன.பல்வேறு தொல்பொருள் அருங்காட்சியகங்களை அலங்கரித்து வரும் இந்தச் சிலைகளில், அங்காரா அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பெண் சிலை மிகவும் பிரபலமானது.
கேட்டல்ஹோயக்கில் கண்டெடுக்கப்பட்ட, அன டோலியன் நாகரிகத்தை விளக்கும் அந்தச் சிலை, அழகான
பெண் ஒருவர் கம்பீரமாக அமர்ந்திருப்பது போலவும், அவள் தன் இரு கைகளுக்குக் கீழேயும் இரண்டு பெரிய
பூனைகள் அல்லது சிறுத்தைகளை அடக்கி வைத்திருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் பாலின பாகுபாடு
கேட்டல்ஹோயக் நாகரிகத்தில் இருந்த ஆண், பெண் பாலின வாழ்க்கை முறை அதன்பின் எப்போதும் தொடர்ந்ததாகத் கெரியவில்லை. நவீன கால ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆண், பெண் பாலின பாகுபாட்டைக் குறிக்கும் பல்வேறு படிநிலைகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தில் மெல்ல மெல்ல ஊடுருவின.
பண்டைய ஏதென்ஸ் போன்ற நகரங்களில் பெண்கள் பலவீனமானவர்கள் அவர்களை நம்பக்கூடாது. அவர்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதே நல்லது என்பன போன்ற கற்பிதங்களை சுற்றியே முழு கலாசாரமும் வளர்ந்தது. இப்படி நிகழ்ந்தது ஏன் என்பதே மிகப்பெரிய கேள்வி.ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான அதிகார சமநிலையில் விவசாயம் ஒரு முக்கியப் புள்ளியாக
இருந்திருக்க முடியுமா என்று மானுடவியலாளர்களும் தத்துவவாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.
விவசாயத்தை மேற்கொள்ள அதிக உடல் வலிமை தேவைப்பட்டது. விவசாயத்தை மனிதன் கைக்கொண்ட
பிறகே, அவன் கால்நடைகள் போன்ற சொத்துகளை வைத்திருக்க ஆரம்பித்தான்.ஒப்பீட்டளவில் சிலர் மற்றவர்களைவிட அதிக சொத்துகளைச் சேர்த்ததால், சமூகத்தில் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக உருவெடுத்தனர். அவர்கள் தங்களின் சொத்துகளை சட்டப்பூர்வ ஆண் வாரிசுகளுக்கே தர
விரும்பினர். இதன் காரணமாக அவர்கள் பெண்களின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினர்.
விவசாயத்தில் பெண்களின் பங்குஉலக அளவில் பெண்களும் எப்போதும் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விஷயம்.
எடுத்துக்காட்டாக, பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பெண்கள் சோளம் அறுவடை
செய்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை மேய்ப்பவர்களாக பணியாற்றும் இளம் பெண்களின்
கதைகளும் உள்ளன.ஐக்கிய நாடுகள் சபை தரவுகளின்படி, இன்றும்கூட உலக அளவில் விவசாய தொழிலாளர்களில் பாதி பேர் பெண்களாக உள்ளனர். குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் கால்நடை மேலாண்மை பணிகளில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு பெண்களே பங்கு வகிக்கின்றனர். உலக அளவில் உழைக்கும் மற்றும் அடிமை வர்க்க பெண்கள் கடுமையான உடல் உழைப்பை மேற்கொள்பவர்களாகவே உள்ளனர்.
பாலின அடிப்படையிலான அடக்குமுறைக்கான வரலாற்றுப் பதிவுகள் கண்டறியப்படுவதற்கு முன்பு இருந்தே நீண்ட காலமாக தாவர மற்றும் விலங்குகளின் வளர்ப்பு இருந்து வந்தது என்பதுதான் ஆணாதிக்க வரலாற்றில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
மெல்ல மெல்ல மாறிய பெண்களின் நிலை
பெண்கள் ஆண்களிடமிருந்து வேறுபட்ட முறையில் நடத்தப்படுவதற்கான முதல் சான்று, பண்டைய மெசப டோமியா நாகரிகத்தில் தென்படுவதாக கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளரான ஜேம்ஸ் ஸ்காட், விவசாயத்தை அடிப்படையாக
கொண்ட ஆரம்பகால சமூகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த சமூகத்தில் உயர் வர்க்கத்தினருக்கு, தங்களுக்கான உபரி வளங்களை உற்பத்தி செய்வதற்கும், அரசை பாதுகாக்கவும், போரிடவும் மக்கள் வளம் தேவைப்பட்டது. இந்த வளத்தை அடைவதற்கான நடவடிக்கைகள் குடும்ப அமைப்பின் மீது தவிர்க்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்தியது. காலப்போக்கில் இளம் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று தருவதில் கவனம் செலுத்த பணிக்கப்பட்டனர்.
அமெரிக்க வரலாற்று ஆசிரியர் கெர்டா லெர்னாரின் ஆவணப் பதிவுகளின்படி, “வேலை மற்றும் தலைமைத்து வத்தில் பெண்களின் பங்கு வரலாற்றில் படிப்படியாக மறைந்து, குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.தந்தை வழி திருமண நடைமுறையுடன் இணைந்த இந்த மாற்றத்தில் பெண் பிள்ளைகள் தங்களது குழந்தைப்பருவத்தில் வளர்ந்த தாய் வீட்டில் இருந்து வெளியேறி, திருமண பந்தம் என்ற பேரில் எதிர்காலத்தில் கணவரின்
குடும்பத்துடன் வாழ நேர்ந்தது. பெண்களை அவர்களின் கணவர்கள் தங்களின் சொத்தாகவே கருதும் நிலை உருவானது” என்று லெர்னாரின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியா, சீனா போன்ற ஆணாதிக்க நாடுகளில், இளம் பெற்றோர் ஆண் குழந்தைகளை விரும்பி பெற்றுக்கொள்ளும் போக்கு இன்றும் உள்ளது.வெகுஜன மக்களின் இந்த மனநிலை பெண் குழந்தைகளை கருவிலேயே கலைக்கும் எண்ணத்திற்கு வழிவகுத் தது. 2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சராசரியாக 100 பெண்களுக்கு 111 ஆண் குழந்தைகள்உள்ளனர்.
கட்டாய திருமணம்
ஆணாதிக்க திருமணங்களின் மூலம் பெண்கள் சுரண்டப்படும் போக்கும் தொடர்கிறது. ஆணாதிக்கத்தின் தீவிர வடிவமாக கட்டாய திருமணம் கருதப்படுகிறது.2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, உலகளவில் 22 மில்லியன் பேர் கட்டாய திருமண பந்தத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.ஆண்கள் இயற்கையாகவே வன்முறை மற்றும் போருக்கு ஏற்றவர்கள் என்ற கருத்தும், பெண்கள் குடும்பத்தை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளவும், குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்கும் உரியவர்கள் என்ற கற்பிதமும் உலக அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூகத்தின் உயர் வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த ஆணா திக்க கருத்துகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.இந்த கட்டமைப்புகள், 1920களில் லண்டன் மிருகக் காட்சி சாலையில் உள்ள மங்கி ஹில்லை போல, ஒரு சிதைந்த சமூக அமைப்புக்கே வழி வகுக்கிறது. ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த சமூகத்தை மனிதர்களால்தான் மறுசீரமைக்க முடியும்.