கல்வி பொதுத் தரா தர சாதாரண தர பரீட்சை முடிவடைந்தவுடன் மாணவர்கள் விடைபெறும் வேளையில் நீலம் விசிறி, பரிசு பொருட்கள் வழங்கி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது காலாகாலமாக நடைபெறும் ஒரு விடயமே. அதே போன்று பாடசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தி தங்களின் அடாவடி தனங்களை வெளிப்படுத்துவதும் காலாகாலமாக நடைபெறுகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் சில மாணவர்கள் தாம் கல்விக் கற்ற பாடசாலையின் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
11 வருடங்களாக பாடசாலையில் கற்ற விடயம் இதுதானா? இப்படிப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி சமூக பொறுப்புடையவர்களா உருவாக போகிறார்கள் என்ற கேள்வி இங்கே எழுகிறது. மாணவர்கள் விடைபெறும் வேளையில் நீலம் தெளிப்பதோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ அது மாணவர்களின் சுதந்திரம். ஆனால் அது மற்றவர்களை பாதிக்கும் வகையில் அமைந்து விட கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டுமென ஊக்குவிக்கின்றனரே தவிர நற்பழக்க வழக்கங்களையும் நேர்மறையான சிந்தனைகளையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க தவறுகின்றனர் என்றே மேற்குறித்த சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
அதே சமயம் இதே பரீட்சைக்கு தோற்றிய மமா.வ.ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயம் பாடசாலை மாணவ, மாணவிகள் பரீட்சை முடிவடைந்த பின்னர் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இதற்கான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
மேலும் தெஹிகொல்ல மகா வித்தியாலய மாணவர்கள் தாம் 11 வருடங்களாக கல்விகற்ற பாடசாலைக்கு தலை வணங்கி நன்றி செலுத்தும் புகைப்படங்களும் பகிரப்பட்டு காண்போரின் மனதில் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது