குஜராத் கட்ச் மாவட்டத்தில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட 108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தின் நவினல் கிராமத்திலுள்ள 231 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை அதானி குழுமத்தின் முந்த்ரா துறைமுகத்திற்காக, குஜராத் மாநில வருவாய்த் துறை வழங்கியது.
அதானி குழுமம் அங்கு 2010-ம் ஆண்டில் வேலி அமைக்கும்போதுதான், மேய்ச்சல் நிலங்களை அதானி குழுமத்திற்கு அரசு வழங்கியது அந்தக் கிராம மக்களுக்குத் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.
கிராமத்தில் மொத்தமுள்ள 276 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களில் 231 ஏக்கர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து 45 ஏக்கர் மேய்ச்சல் நிலம் மட்டுமே மீதமிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய கிராமத்தினர், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர்.
இதில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை 5-ம் திகதியன்று குஜராத் உயர்நீதிமன்றம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட 108 ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் நேற்று (ஜூலை 10) உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு அதானி குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் நிலத்தைத் திருப்பி வழங்குவதை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குஜராத் மாநில வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் பிரமாணப் பத்திரத்தைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை வருகின்ற ஜூலை 26-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.