பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் நேற்று (11) இரவு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் 500 நிர்வாக மட்ட உத்தியோகத்தர்களே பணிப்புறக்கணிப்பை முடித்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை.
இதேவேளை பல்கலைக்கழகங்களின் 12,000க்கும் மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 19 உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் கிட்டத்தட்ட 70 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த வேலைநிறுத்தம் நாட்டின் உயர்கல்வித் துறையை கடுமையாக சீர்குலைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.