காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
காணமல்போன தமது அன்புக்குரியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தை அனுபவித்துவருவது குறித்து கிறிஸ்டின் சிபோல்லா அமைச்சர் அலி சப்ரியிடம் எடுத்துரைத்தார்.
எனவே காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது, அவர்களின் விதி என்ன என்ற பதிலை அவர்களது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தும் செயன்முறை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அத்தோடு இச்செயன்முறைக்கு பக்கச்சார்பற்ற நடுநிலையானதும், சுயாதீனமானதுமான மனிதாபிமானக் கட்டமைப்பு என்ற ரீதியில் செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பாகவும் அவர் இதன்போது பிரஸ்தாபித்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, இது மிகக்கடினமான நீண்ட பயணம் என்று சுட்டிக்காட்டியதுடன், இனங்களுக்கிடையிலான பாலத்தைக் கட்டியெழுப்புவதுடன் கடந்தகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் அதேவேளை அனைத்து இலங்கையர்களும் சுயகௌரவத்துடனும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய எதிர்காலத்தை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் பல்லினத்தன்மை என்பது ஓர் பலம் என்றும், அது பின்னடைவாக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.