தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவோடு பேசி வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் பதில், தமிழ் கட்சிகள் என்ன கோருகின்றன என்பதற்கு அப்பால் தான் இதனைத்தான் செய்ய விரும்புகிறேன் என்றவாறு பதிலளித்திருக்கின்றார். இதேவேளை, விக்னேஸ்வரனால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனை சபையை பரிசீலிக்கவுள்ளார் என்றும் கூறியிருக்கின்றார்.
இதேவேளை, விக்னேஸ்வரன், பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடன் தனியாகவும் பேசி வருகின்றார். இதன் மூலம் பிரேமதாஸவால் மாகாண சபையிலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறிவருகின்றார். ஆனால், விடயங்களை ஆழமாக நோக்கினால் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் நன்மைகளை பெறக்கூடிய வாய்ப்புகள் ஏராளம் – அதனை நாம் தவறவிட்டுவிடக்கூடாது என்னும் ஒரு கருத்து அரசியல் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் தமிழ் கட்சிகள் வெளிப்படையாக தன்னை ஆதரித்தாலும் அல்லது ஆதரிக்காவிட்டாலும்கூட, தமிழ் மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்றே நம்புவது போன்றே தெரிகின்றது. ஏனெனில், 2005இல் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு ரணிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய வல்லமையுடன் இப்போது எவருமில்லை. அதேவேளை ஜனநாயக முறைமைக்கு மாறான வழிமுறைகளில் தமிழ்க் கட்சிகளால் பயணிக்கவும் முடியாது. ஏனெனில், தமிழ் கட்சிகளை காத்திரமான அரசியல் சக்தியாக ரணில் கருதுவதாகத் தெரியவில்லை. அதேவேளை தமிழ் கட்சிகள் மத்தியில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை என்பதும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடிய நிலையில் கட்சிகளின் தலைமைகள் இல்லை என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியும். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏனைய சிங்கள கட்சிகளின் தலைவர்களுக்கு உள்ள அடிப்படையான விடயம் ரணில் தமிழ் சூழலின் பலம் பலவீனத்தை நன்கறிந்த ஒருவர்.
ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து ரணில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும்போது, தமிழ் கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலை முன்வைத்தே தங்களின் தந்திரோபாயத்தை வகுக்க வேண்டும். ஏனெனில், ஜனாதிபதி தேர்தல் தமிழர் தரப்புக்குப் பேரம் பேசுவதற்குக் கிடைக்கும் ஒரு துருப்புச் சீட்டாகும். 2015 இல் ஏற்பட்ட ஜனாதிபதி தேர்தல் தமிழர் தரப்புக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆனால், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் சம்பந்தன் தவறிழைத்தார். சூழ்நிலையை சரியாகப் புரிந்து
கொள்ளாமல் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசி வாய்ப்பை நழுவவிட்டார்.
இப்போது மீண்டுமொரு வரலாற்று சந்தர்ப்பம் கதவைத் தட்டுகின்றது. அதனை ஆரத்தழுவி பயன்படுத்திக்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக நிற்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாமென்று தமிழ்த் தேசிய கட்சிகள் தங்களுக்குள் முதலில் சிந்திக்க வேண்டும்.