இலங்கை நாட்டில் வாழும் பிரஜைகள் அனைவரினதும் அடிப்படை உரிமைகள் என்னவென்பது பற்றி யாப்பில் சொல்லப்பட்டுள்ள போதிலும் வடகிழக்கில் கூடுதலாக அது மறுக்கப்பட்டு வருகின்றமை நெடுநாள் தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது.
போக்குவரத்து பொலிஸார் தமிழர் பகுதிகளில் தண்டப் பண சீட்டை வழங்கும் போது சிங்கள மொழி மூலம் மட்டுமே காரணத்தை சுட்டிக்காட்டி வழங்குகின்றனர்.
தமிழர் பகுதிகளில் வேலைகளை பெற்று, காவல் துறை அதிகாரிகளாக வசித்து வரும் போதிலும் சிறுபான்மை மக்களுக்கு தெரியாத மொழியில் தான் தண்ட சீட்டை எழுதுகின்றார்கள். இது அடிப்படை உரிமை மீறல்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள மொழியில் மாத்திரமே குற்றத்தின் தன்மை மற்றும் பெயர் முகவரி போன்றன எழுதப்படுவதனால் மொழி உரிமை மீறப்படுவதுடன் அடிப்படை உரிமையும் மீறப்படுகிறது.
இது தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் இவ்வாறு தெரிவிக்கிறார்,
கிண்ணியா குட்டிக்கராச்சி சந்தியில் திருகோணமலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் இவ்வாறான அடிப்படை மொழி உரிமை 2024.07.16 மீறப்பட்டுள்ளதுடன் இதனை PS71687 எனும் இலக்கமிடப்பட்ட போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள மொழியில் எழுதி விட்டு கிண்ணியா பொலிஸ் என்பதை மாத்திரம் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இது அடிப்படை உரிமை மீறல் என உரிய மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக கடமையாற்றுபவராக இருந்தால் கடமை நிமித்தம் வீதியில் நிறுத்தும் போது வெள்ளை நிற தலைக் கவசம் அல்லது வெள்ளை நிற பொலிஸ் தொப்பி அணிய வேண்டும் இதை கூட அணியாமல் கடமையில் இருக்கும் அவர்களே சட்டத்தையும் மீறி அடிப்படை உரிமையையும் மழுங்கடிக்கச் செய்கிறார்கள்.
இது தொடர்பில் உரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதுடன், இங்கு ஆரம்பமே பிழையாக உள்ளது பிறகு எப்படி ஏனைய சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம் இலங்கையில் ஒரு நபர் பொலிஸ் அதிகாரியாக பணி புரியவேண்டுமென்றால் மொழி அறிவு கட்டாயம் இருக்கவேண்டுமென்பது மட்டுமல்லாமல், பரீட்சை எழுதி தனது தகுதியை நிரூபிக்கவேண்டும்.
இவ்வாறான சூழலில் பல கட்டங்களை தாண்டி பொலிஸ் அதிகாரியாக தெரிவாகும் இவர்கள் சிறுபாண்மை மொழியை காட்டாயம் புறக்கணிக்கவேண்டும் என்ற மனநிலையில்தான் செயற்படுகிறார்களா என்றே எண்ணத்தோன்றுகிறது என பொதுமக்களும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.