மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று (26) வெள்ளிக்கிழமை ஆலய குரு இரத்திபூரண சுதாகர
குருக்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடனும், கொடியேற்றத்துடனும் ஆரம்பமானது.
வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலை உள்வீதி வலம்வந்து கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
பூஜைகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடனும் நாத,வேத,மந்திரம் முழங்க நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் பிற்பகல் தம்ப பூஜை, சுவாமி உள்வீதியுலாவும், மாலையில் தம்ப பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வெளிவீதியுலா நடைபெறவுள்ளது.
அத்தோடு ஆடி அமாவாசை உற்சத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 03 ஆம் திகதியும், 04 ஆம் திகதி ஆலய தீர்த்த குளத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.