வாழைச்சேனை ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் மருதநகர் மெதடிஸ்த்த திருச்சபையின் 14 ஆவது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு விசேட நிகழ்வுகள் திருச்சபை வளாகத்தில் நடைபெற்றன.
மேற்படி நிகழ்வானது கிராம மட்ட அமைப்புக்களோடு இணைந்து வாழைச்சேனை இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை சேகரத்தின் முகாமைக் குரு அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான நிகழ்வாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், சட்டத்தரணிகள் உட்பட பிரதேசத்தில் பல்வேறு துறை சார்ந்த விடயங்களில் சாதனை படைத்தோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன் குருமனை திறப்பு விழா, பொலித்தின் பாவனையை தடுப்பதற்காக கடதாசியில் செய்யப்பட்ட பைகள், மரத்தில் செய்யப்பட்ட குப்பைத் தொட்டி என்பன அறிமுகம் செய்யப்பட்டது.
பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் மற்றும் ஆரோக்கிய உணவுகளை வழங்கும் நோக்கத்துடன் பாரம்பரிய உணவகமும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வுகள் யாவும் சர்வமத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமாகியது.
நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையின் திருப்பேரவை தலைவர் வணக்கத்திற்குரிய அருட்பணி டபிள்யு.பி.எபிநேசர் ஜோசப், மெதடிஸ்த்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை தலைவர் வணக்கத்திற்குரிய அருட்பணி ஷாம் சுபேந்திரன்,கல்குடா சைவ குருக்கள் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ குகராஜ் குருக்கள் மற்றும் கிராம சேவகர்கள் கலந்து கொண்டனர்.