நாட்டில் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதால் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளவர்கள் போன்றவர்கள் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் முகக் கவசங்களை அணிய வேண்டும், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், பொது போக்குவரத்து உள்ளிட்ட சன நெரிசலான இடங்களில் இடைவெளியை பேண வேண்டும்.
பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவு பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களைப் பாடசாலைகள் அல்லது குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, குமட்டல், சோர்வு, பசியின்மை மற்றும் தொண்டை வலி ஆகியவை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளாகும் என்றார்.
நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ஒரு சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொவிட் தடுப்பூசி போடாதவர்கள். சில உயிரிழப்புகளுக்கு நேரடியாக கொவிட் தொற்று காரணமாக இருக்கவில்லை. ஆனால் பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொவிட் தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகவில்லை என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தள்ளார்.