நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள், அரச அனுசரணை தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஏனைய விசேட பாடசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வருட காலத்துக்கான சுரக்ஷா மாணவர் காப்புறுதியை நேற்று (01) முதல் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுரக்ஷா காப்புறுதியை மாணவர்களுக்கு வழங்குவதற்காக (7,212 மில்லியன்) 711 கோடியே 20 இலட்சம் ரூபாவை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அது தொடர்பான உடன்படிக்கைக் கைச்சாத்து நேற்று நடைபெற்றதுடன் அந்த வைபவத்தில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் கல்வி அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் திலக்கா ஜயசுந்தரவும் காப்புறுதிக் கூட்டத்தாபனத்தில் சார்பில் அதன் பிரதான நிறைவேற்றதிகாரி ப்ரியந்த பெரேராவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இக் காப்புறுதியின் மூலம் அரச அல்லது தனியார் மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவாக 03 இலட்சம் ரூபாவும், வெளிநோயாளர் பிரிவு சிகிச்சைக்கான கொடுப்பனவாக 20,000 ரூபாவும், பாரதூரமான நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக 15,00,000 ரூபாவும் வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விபத்து காப்புறுதி மூலம் முழுமையான அங்கவீனமுற்றிருந்தால் 2,00, 000 ரூபாவும், நிரந்தரமான பகுதியளவில் அங்கவீன முற்றிருந்தால் 1,50,000 ரூபாவும், தற்காலிக பாதிப்புகளுக்காக 25,000 ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆயுள் காப்பறுதியின் கீழ் வருடாந்த வருமானம் 1,80,000 ரூபாவை விட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மேலதிகமாக ‘அஸ்வெசும’ வேலைத் திட்டத்தில் இடம்பெறும் குடும்பங்களின் பெற்றோர், நிரந்தர பாதுகாவலருடன் காணப்படும் பிள்ளைகளுக்கு 75 ஆயிரம் ரூபாவும், ஒரு மரணத்துக்காக வழங்கப்படும் அதிகபட்ச தொகை 2,25,000 ரூபாவுமாகமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்திலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் இந்த நிதி சமமாக ஒதுக்கப்படுமெனவும் பெற்றோர்கள் இருவரும் அல்லது பாதுகாவலரின் மரணத்துக்காக தனித்தனியாக இந்த காப்புறுதி உரித்துடையதாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு இந்த காப்புறுதிக்காக இலவசமாக அட்டைகள் வழங்கப்படுவதுடன் காப்புறுதி டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.