தேர்தலில் வாக்களிக்கும்போது அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு அப்பால் மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு ‘பீல்ட் மார் ஷல்’ சரத் பொன்சேகா ஒரு சிறந்த உதாரணம். 2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமாறு சம்பந்தன் தமிழ் மக்களை கோரினார்.
சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக சம்பந்தனும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் மேடையேறின. யுத்தம் முடிவுற்று ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில் யுத்தத்துக்கு தலைமை தாங்கிய தளபதியான சரத்
பொன்சேகாவை ஆதரிக்குமாறு தமிழ் மக்கள் கோரப்பட்டனர். சரத் பொன்சேகாவின் யுத்த பங்களிப்பு கோட்டாபயவின் பங்களிப்பை விடவும் கூடுதலானது. உண்மையில், அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான சூழல் இருந்திருக்கவில்லை. ஆனாலும், தமிழ் மக்கள் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டனர். யுத்த வெற்றியைப் பங்குபோடுவதற்காக நடைபெற்ற தேர்தலில் ஒரு யுத்த வெற்றியாளரை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன.
மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கான வியூகத்துக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதேபோன்று, 2015இல் மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கான வியூகத்துக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு வியூக முக்கியத்துவம் இருப்பதான ஒரு கற்பனையும் தமிழர் பக்கத்தில் செய்யப்பட்டது. ஆனால், உண்மை வேறு. அதாவது, மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்கள் பயன்படுத்தப்பட்டனரே தவிர, அவர்கள் எந்த நன்மையையும் அடையவில்லை. சம்பந்தன் வேண்டுமானால் நன்மை அடைந்திருக்கலாம் – ஏனெனில், அமிர்தலிங்கத்துக்கு
பின்னர் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் என்னும் வரலாறை சம்பந்தன் ஏற்படுத்திக் கொண்டார்.
இதன்மூலம் தனது நீண்டநாள் ஆசையை சம்பந்தன் பூர்த்தி செய்துகொண்டார். ஆனால், தமிழ் மக்களின் நிலை? ஆனால், தமிழ் மக்களோ தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலின்போது கட்சிகளின் கதையை விடுத்து மக்கள் தங்களின் சொந்த புத்திக்கு முதன்மையளிக்க வேண்டும். ஏனெனில், அரசியல்வாதிகளின் கதைகளை நம்பி வாக்களித்த மக்கள் இதுவரை ஏமாந்ததே வரலாறு. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியை தமிழ் மக்கள் ஆதரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற சரத் பொன்சேகாவோ வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்கக்கூடா தென்று கூறுகின்றார். இந்த இடத்தில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கு மாறு கூறிய சம்பந்தனின் பதில் என்ன?இன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலையென்று
ஒரு சாரார் கூறிவருகின்றனர். கூட்டமைப்பின் மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு கூறுகின்றனர்.
தங்களின் தொகுதிகளில் வாக்குகளை பாதுகாப்பதற்காக விரும்பியோ, விரும்பாமலோ சிலர் இனப்படுகொலையை உச்சரிக்கின்றனர். ஆனால், அவர்களில் பலர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரியவர்கள். ஆனால், இன்று பொன்சேகா அதனை ஓர் அரசியல் ஆயுதமாக பாவிக்கின்றார். இனப்படுகொலை நிலைப்பாட்டை தமிழ் மக்கள் ஆதரித்திருந்தால் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் – என்று கூறுகின்றார். ஆதரிககக்கூறியவர்கள் வாயடைத்துப் போயிருக்கின்றனர்.
2009இற்கு பின்னர் நடைபெற்ற மூன்று ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் அரசியல்வாதிகளின் குறிப்பாக சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இப்போதிருக்கும் கூட்டமைப்பு அல்ல) அறிவுறுத்தலுக்கு அமைவாகவே வாக்களித்தனர். ஆனால், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் அதற்கு நன்றியுள்ளவர்களாக நடந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலின்போது மக்கள் சொந்தமாக முடிவெடுக்க முயற்சிப்பதே – இது வரையான அணுகுமுறையில் அடைந்த தோல்விக்கான பதிலாக அமையும்.