கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு, அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று (03) திகதி சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றதனைத் தொடர்ந்து இன்று (04) திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலயத்தின் இவ்வாண்டிற்கான மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரத்திபூரண சுதாகர குருக்கள் தலைமையில் வெகுவிமர்சையாக கடந்த (26) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இறுதிநாள் பிதிர்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்தக்கேணியில் இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து சுவாமி வெளிவீதி வலம் வருகை தந்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்த அடியவர்கள் தீர்த்தமாடி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், ஆத்ம சாந்தி பிதிர்கடன் தீர்க்கும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இன்றய தினம் மாலை 6.30 மணி அளவில் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடி இறக்க பூசை நடைபெற்றது.
இதேவேளை பக்தர்களின் நலனை முன்னிட்டு தீர்த்தக்கேணி முன்பாக மட்டக்களப்பு இளைஞர்கள் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக 10வது தடவையாக இத்தாக சாந்தி வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.