இராஜாங்க அமைச்சர்களின் செயற்பாடுகள் எல்லாம் ஒரு சாபக் கேடான செயற்பாடாக இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தமது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட நிதிகளை மாவட்டத்தில் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளில் வழங்கும் நிகழ்வுகளில் நேற்றுமுன்தினம் (02) கலந்து கொண்டிருந்தார்.
அதன் ஒரு நிகழ்வாக கிரான் ஆதி வைரவர் ஆலயத்திற்கான புணரமைப்பு நிதி ஒதுக்கீட்டிற்கான வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது அவர் தெரிவித்ததாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இலஞ்சம் வாங்க சென்றுள்ளார்.கடற்கரைக்கு சென்று ஓய்வு எடுத்த காலம், மீன் வாங்க சென்ற காலம், குளிக்கச் சென்ற காலம் எல்லாம் முடிந்து விட்டது. தற்போது இலஞ்சம் வாங்கும் இடமாக கடற்கரை மாற்றப்பட்டுள்ளது. அதிலும் கல்லடி கடற்கரை என்றார். அமல் எனும் வியாழேந்திரன் அமைச்சர் கடந்த மாதம் ஜனாதிபதி மட்டக்களப்பு வந்தபோது அவருக்கு மதிய உணவு வழங்கினார்.
இரண்டு நாட்கள் கழிந்த பின்னர் வியாழேந்திரன் அமைச்சருக்கு மேலும் ஒரு பதவியான சுற்று சூழல் அதிகார சபைக்கான அமைச்சும் சேர்த்து வழங்கப்படுகிறது. அப்போதே நினைத்தேன் மட்டக்களப்பில் உள்ள மண்ணுக்கு ஆபத்து வரப்போகிறது என்று. இவ்வளவு விரைவாக பிடிபடுவார்கள் என்று நினைக்கவில்லை.
கொழும்பில் இருந்து வந்த விசேட இலஞ்ச தடுப்பு பிரிவு 15 இலட்சம் ரூபா வாங்கும்போது வியாழேந்திரனின் தம்பி எனப்படும் அவரது செயலாளரார் (ரொஸ்மன்) அவருடன் சேர்த்து மேலும் ஒருவரையும் கைது செய்து பொலனறுவைக்கு விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இக் கைதானது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரிலாகும். மண் அனுமதி பத்திரமொன்றை வழங்குவதற்காக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவருடன் 60 இலட்சம் ரூபா வரை மேற்கொள்ப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 15 இலட்சம் ரூபா முற்பனமாக பெறப்பட்ட போது இவ் கைது இடம்பெற்றுள்ளதாக பேசப்படுகிறது என்றார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் சம்பவம் இடம்பெற்ற வேளையில் தாம் இருந்த இடத்தில் இருந்து ஓட்டோவில் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் அவரும் பிடிபட்டிருப்பார். வேலைவாய்ப்பு, வீடு கட்டி தருவேன், எல்லா மலசல கூடங்களையும் கட்டித் தருவேன், வீதிகள் அமைத்து தருவேன் என பல்வேறு கதைகளை கூறி மக்களின் வாக்குகளை பெற்று அமைச்சர் ஆகினார்.
மக்களும் இவர்களை நம்பி வாக்களித்தனர்.
தற்போது அவற்றினைன கைவிட்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் உரிமை சார்ந்த விடயம், அபிவிருத்த சார்ந்த விடயங்களில் நாங்களே ஈடுபட்டு வருகின்றோம். இவ்வாறான சூழ்நிலைகளில் தமக்கு தொடர்பு இல்லை என ஊடக சந்திப்பை மேற்கொண்டு தமக்கு தொடர்பில்லாதபடி மறுப்பு தெரிவித்து விடுவார்.
அவரது உறுப்பினர்கள் பலர் வரிசையில் இலஞ்சம் பெறும் செயற்பாடு அவர்களது கடந்த கால செயற்பாடுகள் நிருபித்துள்ளன. சொந்த தம்பி, வளர்ப்பு தம்பி, தொண்டர்கள் என பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். பாலியல் இலஞ்சத்திலும் அவரது இணைப்பாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவே பெண்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.