78 வயதினை கடக்கும் பேகம் காலிதா ஷியாவை சிறையில் அடைக்க காரணமான அதே அரசியல் வன்மமே, 76 வயதான ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
பங்களாதேஷ் அரசியலில் தவிர்க்க முடியாத இரு துருவங்களான இவர்கள், அரசியலில் எப்போதும் ஏட்டிக்கு போட்டியாய் நின்ற ‘Battling Begum’s’ என்பது மிகைப்பட்ட கூற்றல்ல.
ஒரு காலத்தில் வறுமையின் குறியீடாக கருதப்பட்ட தேசம் வங்கம். வெள்ளமும் அனர்த்தமும் கூடவே ஏழ்மையும் அந்நாட்டின் தீரா பிணிகளாய் இருந்தன. காலிதா ஷியா, தன் கணவர் ஷியாஉர் ரஹ்மானின் மறைவுக்கு பின்னர் தேசியவாத கட்சிக்கு தலைமை கொடுக்க முன் வந்தார்.
ஷேக் ஹசீனா தன் தந்தையார் வங்கத்தின் அரசியல் சிற்பி என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் மறைவுக்கு பின்னராக வங்கதேசத்தின் பாரம்பரிய ‘அவாமி லீக்’ கட்சியின் வாரிசு முகமாக உருவெடுத்தார்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த வங்க தேசத்தினை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றிய பெருமை பிரதமர் ஹசீனா அம்மையாரை சாரும். இருப்பினும், தனக்கு சவால் என்று கருதப்படும் அந்நாட்டின் இஸ்லாமிய அமைப்புகளையும், அதன் தலைவர்களையும் தொடர்ச்சியாக சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். எதிர் அரசியல் முகாமினரையும் விட்டு வைக்கவில்லை.
வங்கதேசத்தின் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும்-வாரிசுகளுக்கும் வழங்கப்படும் விசேட இட ஒதுக்கீடு மூலமான வேலை வாய்ப்புகள், இதர சலுகைகள் அந்நாட்டின் நடுத்தர,ஏழை எளிய இளைஞர் யுவதிகளை தொடர்ச்சியாக எரிச்சலூட்டியதை ஷேக் ஹசீனா கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை.
இங்கே தான் அவருக்கு சீரியஸாய் பிரச்சினை எழுகிறது. மாணவர்கள், மக்கள் எழுச்சியை ஆரம்பத்தில் இலேசாக முறியடித்து விடலாம் என்று நினைத்த ஷேக் ஹஸீனா தனக்கான பிரதமர் வாசஸ்தலம் வரை புரட்சி நீள்வதை லேட்டாகவே புரிந்து கொண்டு ஹெலிகொப்டரை வரவழைத்து அயலக தேசமான இந்தியாவுக்கு பறந்தார்.
ஷேக் ஹஸீனா நம்பிய இராணுவம் மொத்தமாக கை விரித்த நிலையில், தன் உயிரையாவது பாதுகாக்கும் கடைசி எத்தனமே அவரது வெளியேற்றம். ஷேக் ஹஷீனாவை போராட்டக்காரர்களிடம் இருந்து பத்திரமாய் பாதுகாத்து வழியனுப்பி வைத்த இராணுவமே மக்களின் இனிப்பை உண்டு, கை குலுக்கி கொண்டதே இங்கே நமக்கு புரியாத டுவிஸ்ட்.