சாணக்கியன் தமிழரசு கட்சியின் அனுமதி இன்றி 60 கோடி ரூபா நிதியினை ரணிலிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சாணக்கியனுக்கு தமிழரசு கட்சியின் அனுமதி இன்றியே 60 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்காக கட்சியின் முடிவின்றி இவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளவர் பற்றி மக்கள் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
நான் அறிந்த வரையில் கிட்டத்தட்ட சாணக்கியனுக்கு ஜனாதிபதி அவர்கள் 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஏன் இவ்வளவு நிதியினை சாணக்கியனுக்கு வழங்கியுள்ளார் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைப்பார்கள் அதற்கு மக்களுக்காக பெற்றுள்ளேன் என்று கட்சிக்கு கூட தெரியாமல் கட்சியின் முடிவை மீறியும் இந்தப் பாரிய தொகையை ரணிலிடம் பேசி ஒரு இணக்கப்பாட்டுடன் பெற்றுள்ளார்.
ரணில் சாணக்கியனுக்கு ஒரு உத்தரவாதத்தினை வழங்கியிருப்பார் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்வேன் என்ற உத்தரவாதத்தை வழங்கி இருப்பதனால் தான் ஜனாதிபதி இவ்வளவு பாரிய தொகையை வழங்கியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான நரி தந்திரம் உடையவர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு பாவிக்க முடியும் என்றும் நன்கு அறிந்தவர். சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளமை தமிழரசு கட்சியின் அனுமதி இன்றி தனிப்பட்ட ரீதியிலேயே வழங்கப்பட்டுள்ளது.