நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக வாழ்வை கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
லண்டன் நேர சயன நிலையில் இருந்து தற்போதுதான் மட்டக்களப்பு நேர முழிப்புக்கு கருணாகரம் வந்துள்ளார் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
”ரணிலிடம் இருந்து சாணக்கியனுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்” என்ற கருத்து தொடர்பாக நேற்றைய தினம் (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சாணக்கியன் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினரான கருணாகரம் தனது ஊடக சந்திப்பின் போது இவ் விடயம் தொடர்பாக விமர்சித்திருந்தார்.
நான் அவர் போல் மக்களால் தெரிவு செய்யப்பட்டு தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் லண்டனில் மக்களுக்கு சேவை ஆற்றாமல் உல்லாசமாக கழிக்கவில்லை.
அவர் லண்டன் நேர சயன நிலையில் இருந்து தற்போதுதான் மட்டக்களப்பு நேர முழிப்புக்கு வந்துள்ளார்.
நான் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவன். அவர்களின் வரிப்பணமே அவர்களின் அபிவிருத்திக்கான பணமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
எனது பக்கட்டுக்களை நான் நிரப்பவில்லை. எனது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதியிடம் இருந்து பன்முகப்படுத்தப்பட்ட நிதியாக 60 கோடி ரூபாவை பெற்றேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் கூட உரிமை சார்ந்த அபிவிருத்தி என்றே அமைந்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுடன் நேரடியாக பயணிக்கின்றமையினால் அவர்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவே ஜனாதிபதியிடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெற்றேன்.
அத்துடன், மக்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஆளுமை என்னிடம் உள்ளது. அதற்கமையவே 60 கோடி ரூபாய்க்கான வேலைதிட்டத்தின் பட்டியலை சமர்ப்பித்து 60 கோடி பன்முகப்படுத்தப்பட்ட நிதியை மக்களுகாக பெற்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.