ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை எனவும் நாம் அறிவிக்கும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம்(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.
ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை தமிழ் மக்கள் ஏற்கபோவதில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தெரிவிப்பார்கள்.

ஆனால் மக்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றதில்லை. இம்முறையும் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை.
தமிழ் பொது வேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ளவேண்டும்.
கடந்த கால தேர்தல்களிலும் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்திலேயே அறிவித்திருந்தோம்.