அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் காணச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயோர்க்கிற்கு பயணித்தது.
அப்போது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,600 பேர் பலியாகினர்.
பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் 1985ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றுலா பயணத்தில் 4 போ் இணைந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் தலா 250,000 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் நியூயேதர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இவ்வளவு பணம் செலுத்தி பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளில் ஆக்ஷன் ஏவியேஷன் என்ற விமான நிறுவனத்தின் தலைவர் ஹமிஷ் ஹார்டின், பாகிஸ்தானின் பிரபல கோடிஸ்வர குடும்ப உறுப்பினர்களான எங்ரோ கொர்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் ஆகியோர் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் இணைந்த நான்காவது நபர் Oceangate நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் அதன் நிறுவனர் Stockton Rush எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலின் கெப்டனாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போல் ஹென்றி நர்கெலோட் செயற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.