இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவதாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சலகள் மற்றும் தொற்றுநோய்கள் பரவ தொடங்கின.
அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவியதுடன் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியது.
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து (ஜனவரி மாதம் முதல்) தற்போது வரை எலி காய்ச்சலுக்கு 121 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் எலி காய்ச்சலுக்கு 2022-ம் ஆண்டு 93 பேரும், 2023-ம் ஆண்டு 103 பேரும் பலியாகியிருக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டதில் இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.