இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது 21.09.2024 அன்று நடைபெறவுள்ளது. அதில் 39 பேர் போட்டியிடவுள்ளதுடன் , தமிழ் தரப்பு வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.
அதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் அரியநேந்திரன், தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துக்கொள்வதாவது,
ஜனாதிபதித்தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 04, 05, 06ம் திகதிகளில் இலங்கை முழுவதும் சகல திணைக்களங்களிலும் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை தேர்தலில் வடக்கு கிழக்கு தாயகத்தில் இருந்து ஒரு தமிழ்ப்பொதுவேட்பாளராக நான் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றேன்.
நான் போட்டியிடுவதன் நோக்கம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி பெறுவதற்காக அல்ல. மாறாக கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகளும் எமது இனப்பிரச்சனைக்கான ஆக்கபூர்வமான எந்த ஒரு அரசியல் தீர்வையும் வழங்கவில்லை, வழங்குவதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவும் இல்லை தமிழ்த்தலைவர்கள் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளுடனும் பேசிப்பேசி ஏமாற்றப்பட்டதே வரலாறு. அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுதான் 9வது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற அடையாளம்.
தற்போது இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதைப்போன்று நாட்டில் பொருளாதாரப்பிரச்சனை மட்டுமே உள்ளது எனும் விதமாக, அதனை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களை பிரதான பெரும்பான்மை வேட்பாளர்கள் நால்வரும் மேற்கொள்கின்றனர்.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனை சம்பந்தமாக தமிழ்த்தலைவர்களால் முன்வைக்கப்பட்ட சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான எந்த ஒரு தீர்வையும் அவர்களால் ஏற்கக்கூட முடியவில்லை. தென்பகுதி பெரும்பான்மை மக்களிடம் ஒரு முகத்துடனும், வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறதுடன், வெளிப்படைத்தன்மை அவர்களிடம் இல்லை.
நாட்டில் பொருளாதாரப்பிரச்சனை ஏற்பட மூல காரணம் பல்லாயிரம் கோடி நிதிகளை செலவு செய்து ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்தமையே காரணம் போர் மௌனித்தபோதும் பாதுகாப்பு அமைச்சிக்கான பாரிய நிதி ஒதுக்கப்படுவதும் பொருளாதார நெருக்கடிக்கான காரணமாகும்.
இந்த உண்மையை மறைத்து பிரசாரங்களை முன் எடுக்கின்றனர். இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டால் மட்டுமே பொருளாதார பிரச்சனை முற்றாக நீங்கும் என்ற உண்மையை புரிந்தும் புரியாதவர்கள் போல் உள்ளனர்.
2009மே- 18 முள்ளிவாய்க்கால் மௌனம் ஏற்பட்டு 15 வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமை விடயங்கள் மறைக்கப்பட்டு அபிவிருத்தியும், சலுகையும்தான் தமிழர்களிடம் முதன்மை படுத்தப்படுகிறது.
அபிவிருத்தி என்பது கட்டாயம் தேவை ஆனால் அதற்காக அபிலாஷைகளை அடகு வைப்பதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை.
இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டுதான் ‘தமிழ் பொது வேட்பாளர்’ என்ற எண்ணக்கரு பல்வேறுபட்ட தமிழ் சமூக பொது அமைப்புகள், புத்திஜீவி பிரமுகர்கள், ஊடக ஆய்வாளர்கள், சமய தலைவர்கள், பல்கலை கழக மாணவர்கள், கல்வியாளர்கள், பல் துறை சமூக ஆர்வலர்கள், மக்கள் நலன் சார் அமைப்புகள், பல தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட “தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு” எனும் அமைப்பின் ஊடாகவே என்னை தமிழ் பொது வேட்பாளராக தெரிவு செய்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ் மக்களின் ஒரு அடையாளமாக நான் போட்டியிடுகிறேன்.
வாக்களிக்கும்போது வாக்குச்சீட்டில் 18 வது இடத்தில் எனதுபெயர் “அரியநேத்திரன் பாக்கியசெல்வம்” என குறிப்பிடப்பட்டு அதற்கு நேரே சங்கு சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் எனக்காக வாக்களிக்க வேண்டாம் எமது இனத்திற்காக வாக்களியுங்கள்!
“நமக்காக நமது வாக்கு” என்ற உள்ளார்ந்த உணர்வுடன் தேசத்தின் கடமையாக ஏற்று சங்கு சின்னத்திற்கு நேரே [🐚❌] புள்ளடி இட்டு இந்த உன்னத கடமையை இன நலன் கருதி நிறைவேற்றுமாறு மிகவும் வினயமாக அன்புரிமையுடன் வேண்டுகிறேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.